×

பிரதமர் மோடி பயணித்த சாலையில் ஜெலட்டின் சிக்கியது: தனிப்படை போலீசார் விசாரணை

 

பெங்களூரு: பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரு, தெற்கு மாவட்டம் ராம்நகரில் தனியார் ஆசிரமத்தில் நடந்த நிகழ்வில் நேற்று பங்கேற்றார். இதற்கிடையே பிரதமர் வருகிற வழியில் வெடி குண்டு வைத்திருப்பதாக ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு போலீஸ் நிலையத்திற்கு வந்தது. இதைத்தொடர்ந்து துரிதமாக செயல்பட்ட போலீசார் வெடிகுண்டு மிரட்டல் குறித்து விசாரணை நடத்தி கோரமங்களா பகுதியை சேர்ந்த லோஹித் என்ற நபரை கைதுசெய்தனர். கைதான லோஹித் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. இதற்கிடையே ராம்நகர் மாவட்ட டிஎஸ்பி சீனிவாஸ் தலைமையிலான போலீசார் கக்கலிபுரா தாதகுனி என்ற இடத்தில் 2 ஜெலட்டின்களை கைப்பற்றினர்.

இது குறித்து மத்திய மண்டல போலீஸ் ஐஜி கிரீஷ் கூறுகையில், ‘பிரதமர் நரேந்திர மோடி பயணித்த பாதையில் 2 ஜெலட்டின் சிக்கியுள்ளது. இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. கோரமங்களா போலீசார் கைது செய்த லோஹித் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் அவருக்கும் ஜெலட்டின் சிக்கியுள்ள சம்பவத்திற்கும் தொடர்பு கிடையாது, விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார். பிரதமர் நரேந்திர மோடி பயணித்த வழியில் ஜெலட்டின் சிக்கிய சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நான்கு இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 50 போலீசார் அடங்கிய சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. அதை வைத்தது யார்? என்பது தொடர்பாக பல் வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Modi ,Bengaluru ,Narendra Modi ,Ramnagar, ,district ,
× RELATED விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய பெண் எம்பி: மகாராஷ்டிராவில் பரபரப்பு