- ராகுல் காந்தி
- விஜய்
- இல்
- காங்கிரஸ்
- யூனியன் அரசு
- புது தில்லி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
புதுடெல்லி: தமிழக முதல்வர் விஜய் பதவி ஏற்பு குறித்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பதிவிட்ட வீடியோக்கள் முடக்கப்பட்ட விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கும் இதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் முதல்வராக தவெக தலைவர் விஜய் நேற்று பதவி ஏற்றார். தமிழக பொறுப்பு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், விஜய் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களுக்கு பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
இந்த விழாவில் பங்கேற்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோ ஒரு மணி நேரத்திற்குள்ளாக 1.2 கோடி பார்வைகளைப் பெற்றது. மேலும் அவர் பதிவிட்ட புகைப்படங்கள் 4.6 கோடி பேரை சென்றடைந்தன. ஆனால், இந்த பதிவுகள் திடீரென முடக்கப்பட்டன. இது தொடர்பாக காங்கிரஸ் தரப்பில் இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தேசிய பிரசாரத் தலைவர் வத்சா கூறுகையில், ‘ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் விதிமுறைகளால் இந்த முடக்கம் நடந்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்களின் குரல் திட்டமிட்டு ஒடுக்கப்படுகிறது’ என்று குற்றம் சாட்டினார்.
இந்தக் குற்றச்சாட்டுகளை ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தற்போது திட்டவட்டமாக மறுத்துள்ளது. ராகுல் காந்தியின் இன்ஸ்டாகிராம் பதிவுகளை முடக்குவதில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இன்ஸ்டாகிராம் தளத்தின் தொழில்நுட்ப அமைப்புகளில் ஏற்பட்ட தவறான அடையாளப்படுத்துதல் காரணமாகவே இந்தத் தடை ஏற்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்தப் பதிவுகள் மீண்டும் சரிசெய்யப்பட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீட்கப்பட்டுள்ளன. தங்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் இந்தத் தகவல்கள் தவறானவை என்று ஒன்றிய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
