×

சில்லி பாயிண்ட்

 

*  உலக ஸ்குவாஷ் வீர் சோத்ரானி வெற்றி

கிஸா: உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிகள் எகிப்தின் கிஸா நகரில் நடந்து வருகின்றன. இதில் பங்கேற்ற இந்திய வீரர் வீர் சோத்ரானி, 14-12, 8-11, 5-11, 11-7, 11-2 என்ற புள்ளிக் கணக்கில் சக இந்திய வீரர் அபய் சிங்கை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். இதைத் தொடர்ந்து அடுத்த சுற்றுப் போட்டியில் எகிப்தை சேர்ந்த உலகின் நம்பர் 1 வீரர் மொஸ்தபா அஸல் உடன், நாளை நடக்கும் போட்டியில் வீர் சோத்ரானி மோதவுள்ளார். அடுத்து நடக்கும் போட்டி ஒன்றில் தமிழகத்தை சேர்ந்த வேலவன் செந்தில் குமார், பிரான்சை சேர்ந்த உலகின் 5ம் நிலை வீரர் விக்டர் குரோயின் உடன் மோதவுள்ளார்.

* சீரி ஏ கால்பந்து டொரினோ அபாரம்

டுரின்: இத்தாலியில் நடந்து வரும் சீரி ஏ கால்பந்து போட்டியில் நேற்று டொரினோ, சஸோலோ அணிகள் மோதின. போட்டியின் துவக்கத்தில் சஸோலோ அணி வீரர்கள் சிறப்பாக ஆடி கோல் போடுவதில் முனைப்பு காட்டினர். 51வது நிமிடத்தில் அந்த அணியின் கிறிஸ்டியன் தோர்ஸ்ட்வெட் முதல் கோல் போட்டு அசத்தினார். அதன் பின் டொரினோ அணி வீரர்கள் சுதாரித்து ஆடி கோல் போடுவதில் தீவிரம் காட்டினர். டொரினோ அணியின் கியோவன்னி சிமியோன், 66வது நிமிடத்திலும், மார்கஸ் ஹோல்ம்கிரென் பெடெர்சென் 70வது நிமிடத்திலும் கோல் போட்டனர். அதனால், 2-1 என்ற கோல் கணக்கில் டொரினோ வெற்றி பெற்றது.

* பரிசு பணம் கிடைக்கல… அபிஜீத் குப்தா புலம்பல்

புதுடெல்லி: இந்தியாவை சேர்ந்த புகழ்பெற்ற செஸ் கிராண்ட் மாஸ்டர் அபிஜீத் குப்தா, கடந்தாண்டு நடந்த ஒடிசா ஓபன் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதற்கு உரிய பரிசுத்தொகை கிடைக்கவில்லை என மனம் வருந்தி எக்ஸ் சமூக தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக, போட்டி அமைப்பாளர்களுக்கு பலமுறை கடிதம் எழுதியதாகவும், விரைவில் பரிசுத் தொகை கிடைக்கும் என அவர்கள் உறுதி கூறியதாகவும் ஆனால், இதுவரை பரிசு கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அபிஜீத் குப்தா, செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பதக்கம் வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Chili ,Veer Chotrani ,Giza ,World Squash Championships ,Giza, Egypt ,
× RELATED ஐபிஎல் 2026: குஜராத் அணிக்கு எதிரான...