×

இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: விறுவிறு போட்டியில் திரில்லாய் வென்ற காஃப்

 

ரோம்: இத்தாலியன் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றுப் போட்டியில் நேற்று, அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப் வெற்றி பெற்றார். இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டிகள் ரோம் நகரில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் 3வது சுற்றுப் போட்டி ஒன்றில் அமெரிக்காவை சேர்ந்த உலகின் 4ம் நிலை வீராங்கனை கோகோ காஃப், அர்ஜென்டினா வீராங்கனை சொலானா சியரா மோதினர்.

துவக்கத்தில் சிறப்பாக ஆடிய சியரா, முதல் செட்டை 7-5 என்ற புள்ளிக் கணக்கில் வசப்படுத்தினார். 2வது செட்டில் சுதாரித்து அசத்தலாய் ஆடிய காஃப், 6-0 என்ற புள்ளிக்கணக்கில் வென்றார். அதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டை 6-4 என்ற புள்ளிக் கணக்கில் காஃப் கைப்பற்றினார். அதனால், 2-1 என்ற செட் கணக்கில் வெற்றி வாகை சூடிய அவர், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவோலினி, பெல்ஜியம் வீராங்கனை எலிஸே மெர்டென்ஸ் மோதினர்.

இப்போட்டியின் முதல் செட்டை 6-4 என்ற புள்ளிக் கணக்கில் பவோலினி வசப்படுத்தினார். 2வது செட்டில் இருவரும் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் டைபிரேக்கர் வரை நீண்டது. அந்த செட்டை, 7-6 (7-5) என்ற புள்ளிக் கணக்கில் மெர்டென்ஸ் கைப்பற்றினார். அதைத் தொடர்ந்து 3வது செட்டையும், 6-3 என்ற புள்ளிக் கணக்கில் அவர் வென்றார். அதனால், 2-1 என்ற செட் கணக்கில் வெற்றி வாகை சூடிய மெர்டென்ஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.

Tags : Italian Open Tennis ,Gauff ,Rome ,Coco Gauff ,Italian Open Tennis Women's Singles ,Italian Open Tennis Tournament ,
× RELATED ஐபிஎல் 2026: குஜராத் அணிக்கு எதிரான...