புதுடெல்லி: ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 51வது போட்டி டெல்லி கேபிடல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையே டெல்லியில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதையடுத்து, டெல்லி அணியின் துவக்க வீரர்களாக பதும் நிஸங்கா, கே.எல்.ராகுல் களமிறங்கினர். கார்த்திக் தியாகி வீசிய 5வது ஓவரின் கடைசி பந்தில் ராகுல் (23 ரன்) ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த நிதிஷ் ராணா (8 ரன்), சமீர் ரிஸ்வி (3 ரன்), 8வது மற்றும் 10வது ஓவர்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்து அதிர்ச்சி தந்தனர். அதுவரை நிலைத்து ஆடி ரன் குவித்த துவக்க வீரர் பதும் நிஸங்கா, அனுகுல் ராய் வீசிய 11வது ஓவரில் (29 பந்து, 3 சிக்சர், 5 பவுண்டரி, 50 ரன்) அவுட்டானார். அதே ஓவரில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 2 ரன்னில் ஆட்டமிழக்க, டெல்லி அணி செய்வதறியாமல் திணறியது. கடைசி கட்டத்தில் சொற்ப ரன்களில் விக்கெட்டுகள் வீழ்ந்ததால், 20 ஓவர் முடிவில் டெல்லி, 8 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
கொல்கத்தா தரப்பில் அனுகுல் ராய், கார்த்திக் தியாகி தலா 2, வைபவ் அரோரா, சுனில் நரைன், கேமரூன் கிரீன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 2வது இன்னிங்சை துவங்கிய கொல்கத்தா அணி 2 விக்கெட் இழப்புக்கு 14.2 ஓவரில் 147 ரன் எடுத்து வெற்றிபெற்றது. பின் ஆலன் சதமடித்து அசத்தினார். டெல்லி அணியில் அக்சர் பட்டேல் ஒரு விக்கெட் எடுத்தார்.
