×

விளக்கம் கேட்டு நடா நோட்டீஸ் ஊக்க மருந்து சோதனைக்கு செல்லாத ஜெய்ஸ்வால், ஷபாலி

 

புதுடெல்லி: ஊக்க மருந்து சோதனைகளுக்கு வராமல் டிமிக்கி கொடுத்த முன்னணி கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், கிரிக்கெட் வீராங்கனை ஷபாலி வர்மாவுக்கு, தேசிய ஊக்க மருந்து தடுப்பு அமைப்பான நடா நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தேசிய ஊக்க மருந்து தடுப்பு அமைப்பான நடாவில் பதிவு பெற்ற சோதனை பட்டியலில் இடம்பெற்றுள்ள வீரர், வீராங்கனைகளிடம் அவ்வப்போது ஊக்க மருந்து சோதனைகள் நடப்பது வழக்கம்.

முன்னணி கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், வீராங்கனை ஷபாலி வர்மா ஆகியோர், கடந்தாண்டு, நடா அதிகாரிகள் முன் ஆஜராகி ஊக்க மருந்து சோதனையில் பங்கேற்க அழைக்கப்பட்டிருந்தனர். அந்த சோதனைகளுக்கு ஆஜராகாத இருவரும், அது தொடர்பான விளக்கங்களையும் அளிக்கவில்லை.

இந்நிலையில், இந்த இருவருக்கும் நடா அமைப்பு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும், இதுதொடர்பாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஆகியவற்றுக்கும் நடா தகவல் தெரிவித்துள்ளது. இத்தகவலை பிசிசிஐ வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கிரிக்கெட் போட்டி, வரும் 2028 லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, ஊக்க மருந்து சோதனை தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் நாம் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்’ என்றார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் தற்போது, ஐபிஎல்லில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடி வருகிறார். ஷபாலி வர்மா, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ளார்.

Tags : NADA ,Jaiswal ,Shafali ,New Delhi ,National Anti-Doping Agency ,Yashasvi Jaiswal ,Shafali Verma ,NAD ,
× RELATED ஐபிஎல் 2026: குஜராத் அணிக்கு எதிரான...