×

10 அணிகளுக்கும் பிசிசிஐ அறிவுறுத்தல் ஐபிஎல் வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்: மீறினால் கடும் நடவடிக்கை

 

புதுடெல்லி: ஐபிஎல்லில் ஆடிவரும் வீரர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள பிசிசிஐ, மீறினால் சஸ்பெண்ட் உள்பட பல கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. ஐபிஎல்லில் ஆடி வரும் பல வீரர்கள் தங்கள் பெண் நண்பிகளுடன் வருகிறார்கள்; தாங்கள் தங்கும் ஓட்டல் அறைகளுக்கு அவர்களை அழைத்து செல்கிறார்கள் என்பன உட்பட பல்வேறு புகார்கள் சமீப காலமாக எழுந்துள்ளன. இதற்கு முடிவு கட்டும் வகையில் பிசிசிஐ நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், 7 பக்கங்கள் கொண்ட விதிமுறைகள் அடங்கிய கையேட்டை, ஐபிஎல்லில் இடம்பெற்றுள்ள 10 அணிகளுக்கும் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா அனுப்பி உள்ளார். ஐபிஎல்லில் ஆடிவரும் வீரர்களுடன் அழகிகளை பழகவிட்டு ஹனிடிராப்பிங் செய்யும் அபாயம் உள்ளது என்றும், கிரிக்கெட் வீரர்கள் தங்கும் ஓட்டல் அறைகளில் திடீர் சோதனை நடத்தப்படும் என்றும் யாராவது தவறு இழைத்தது தெரிய வந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த கையேட்டில் கூறப்பட்டுள்ளது.

ஐபிஎல் அணிகள் தங்களின் கீழ் உள்ள வீரர்களின் ஒழுக்கம், நடத்தை முறைகளில் தீவிர கண்காணிப்புடன் செயல்பட வேண்டும் என்றும், இந்த விஷயத்தில் முன்னெச்சரிக்கையுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல் ஐபிஎல் அணிகளில் தொடர்புள்ள உறுப்பினர்களின் அறைகளில் முன்னறிவிப்பின்றி சோதனைகள் நடத்தப்படும். அந்த உறுப்பினர்கள், கிரிக்கெட் வீரர்கள் அல்லது ஐபிஎல் நிர்வாகிகளுக்கு எந்த வகையில் நெருக்கமாக இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் இந்த சோதனைகள் நடைபெறும்.

அனைத்து வீரர்களும், அணிகளின் துணை ஊழியர்ளும், பாதுகாப்பு அதிகாரி, அணி நிர்வாக அதிகாரி ஆகியோரிடம், தாங்கள் ஓட்டல் அறையை விட்டு எப்போது சென்றாலும் அதற்கான ஒப்புதலை பெற்று செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. போட்டிகள் நடைபெறும்போது, ஓய்வறையில் அமர்ந்திருக்கும் வீரர்கள் அல்லது மேலாளர்களுடன் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் தொடர்பு கொள்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அந்த கையேட்டில் பிசிசிஐ வலியுறுத்தி உள்ளது. பிசிசிஐயின் விதிமுறைகளை மீறும் வீரர்கள் மீது, சஸ்பெண்ட் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : BCCI ,IPL ,New Delhi ,
× RELATED ஆஸி யு-18 அணிகளுடன் ஹாக்கி போட்டி:...