காவி உடையணிந்து, 108 ஜெபமாலையுடன் பௌத்த துறவியாக மாறிய ரோபோ!

சியோல்: தென் கொரியாவின் பௌத்த மத வரலாற்றின் ஒரு புதிய முயற்சியாக அந்நாட்டின் முதலாவது மனித உருவ ரோபோ அதிகாரப்பூர்வமாக பௌத்த மத துறவியாக தீட்சை பெற்றுள்ளது. சியோலில் உள்ள புகழ் பெற்ற ஜோக்யேசா (Jogyesa) ஆலயத்தில், புத்தர் பிறந்தநாளான வெசாக் (Vesak) தினத்தை முன்னிட்டு இந்த சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.

சுமார் 130 சென்டிமீட்டர் உயரமும் மனித உருவ அமைப்பு கொண்ட இந்த ரோபோவுக்கு ‘காபி’ (Gabbi) என்று பெயரிடப்பட்டுள்ளது. கொரியா மொழியில் காபி என்னும் சொல் கருணையை குறிக்கும் சொல்லாகும்.

சீனாவின் unitree நிறுவனம் தயாரித்த G1 ரகத்தை சேர்ந்த இந்த ரோபோ சுமார் 13 ஆயிரத்து 500 அமெரிக்க டாலர்கள் மதிப்பிலானது. வழக்கமாக ஒரு மனித துறவிக்கு வழங்கப்படும் தீட்சை சடங்கு முறைகளில் இந்த ரோபோவிற்காக சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக கையில் ஊதுபத்தியால் சூடு போட்டுக்கொள்ளும் சடங்குக்கு பதிலாக தாமரை விளக்கு திருவிழாவின் அடையாள ஸ்டிக்கர் ரோபோவின் கையில் ஒட்டப்பட்டது.

மேலும் அதன் கழுத்தில் 108 மணிகள் கொண்ட ஜெபமாலை அணிவிக்கப்பட்டது. இந்த ரோபோவிற்கு வழங்கப்பட்ட தீட்சை சான்றிதழில் அதன் உற்பத்தி தேதியான 2026 மார்ச் 3ஆம் தேதி பிறந்த நாளாக குறிப்பிடப்பட்டது.

பௌத்த மதத்தில் இளைஞர்களின் பங்களிப்பு குறைந்து வருவதன் காரணமாக இந்த தொழில்நுட்ப முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக சுட்டிக்காட்டப்படுகிறது. தென் கொரியாவில் கடந்த 2005ஆம் ஆண்டு 23 சதவீதமாக இருந்த பௌத்தர்களின் எண்ணிக்கை தற்போது 16 சதவீதமாக குறைத்துள்ளது குறிப்பாக 20 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களிடையே இந்த எண்ணிக்கை 8 சதவீதமாக மட்டுமே உள்ளது. இதனை சரி செய்யவும் நவீன காலத்திற்கேற்ப மதத்தை புதுப்பிக்கவும் ஜோக்ஷென் பீடத்தின் துறவி ஜிம்பூ ஹிப் பௌத்தம் என்ற உத்தியின் கீழ் இத்தகைய தொழில்நுட்ப மாற்றங்கள் ஊக்குவிக்கப்படுகிறது.

இந்த சடங்கின் போது ரோபோவுக்காக ஐந்து நெறிமுறைகள்பிரத்தியேகமாக வகுக்கப்பட்டன. உயிர்களை பாதுகாத்தல், பிற இயந்திரங்கள் மற்றும் பொருட்களை சேதப்படுத்தாமல் இருத்தல், மனிதர்களுக்கு மதிப்பளித்தல், ஏமாற்று வேலைகளை தவிர்த்தல் மற்றும் மின்னாற்றலை சிக்கனமாக பயன்படுத்துதல் ஆகிய ஐந்து விதிகளையும் பின்பற்றுவதாக ரோபோ உறுதியளித்தது. இந்த விதிகளை உருவாக்குவதில் chatgpt மற்றும் gemini போன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களின் உதவியும் நாடப்பட்டது. ஆலயதின் கலாச்சார இயக்குனர் இது குறித்து பேசுகையில் ரோபோ மனித வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறிவருவதால் அவற்றை மத செயல்பாட்டில் இணைப்பது இயல்பான ஒன்று என குறிப்பிட்டார்.

Related Stories: