199. சர்வ ஸக்திமயீ 200. ஸர்வ மங்களா 201. ஸத்கதி ப்ரதா, 202. ஸர்வேச்வரீ 203. ஸர்வமயீ, 204. ஸர்வமந்த்ர ஸ்வரூபிணீ. 205. ஸர்வ யந்த்ராத்மிகா, 206. ஸர்வ தந்த்ரரூபா, 207. மநோந்மநீ, 208. மாஹேஸ்வரீ, 209. மஹாதேவீ, 210. மஹாலக்ஷ்மி, 211. ம்ருட ப்ரியா.
முதல் நாமாவான சர்வ ஸக்திமயீ என்பதை பார்ப்போம். அம்பாள் என்றாலே நமக்கு மனதில் நினைவுக்கு வருவது சக்தி என்பதேயாகும். சக்தி என்றாலே energy. அம்பாளுக்கு எத்தனையோ பெயர்கள் இருந்தாலும் சரிதான், பிரதானமாக சக்தி என்றே சொல்கிறோம்.
நாம் தினசரி பார்க்கக் கூடிய சாதாரண வேலையில் ஆரம்பித்து, மிகப் பெரிய வேலை வரைக்கும் எல்லாவற்றிற்கும் மிகப் பெரிய சக்தி தேவை. தூங்குவது முதல் பேசுவது, நடப்பது, சாப்பிடுவது, தாகம் எடுத்தல், நீர் அருந்துதல் எல்லாவற்றிற்கும் சக்தி தேவைப்படுகிறது. தூக்கம் வருவதற்குக் கூட ஒரு சக்தி தேவை. இப்படியாக தினசரி வேலையில் தொடங்கி, சிருஷ்டி,ஸ்திதி, சம்ஹாரம் வரை இருப்பதால் அம்பாளுக்கு சர்வ ஸக்திமயீ என்று பெயர்.
தேவி மகாத்மியத்தை நேரடியாகவே அம்பாளை ஸ்துதி பண்ணக் கூடிய இடங்கள் வரும். இதில் எல்லோருக்கும் தெரிந்த ஒரு ஸ்லோகம் உண்டு. யாதேவி ஸர்வ பூதேஷூ… என்று வரும். இந்த ஸ்துதியில்தான் சர்வ ஸக்திமயீ… என்கிற நாமத்தின் முழுப் பொருளையும் காணலாம். உதாரணமாக நித்ரா ரூபேண ஸம்ஸ்திதா… த்ருஷ்ணா ரூபேண ஸம்ஸ்திதா… செல்வம், கல்வி,, எதெல்லாம் நாம் சக்தி என்று நினைக்கிறோமோ எல்லாவற்றையும் செய்பவளாக சக்தி அளிப்பவளாக இருக்கிறாள்.
ஸர்வ மங்களா – பார்த்தவுடன் நம்முடைய கண்ணுக்கு எதெல்லாம் இனிமையாக இருக்கிறதோ. எதெல்லாம் நம் மனதை இனிமையாக்குகிறதோ அதெல்லாம் மங்களமாகும். மனதளவிலும், பேச்சளவில், சரீர அளவில் எல்லாவற்றையும் தாண்டி ஆத்மானுபவம் வரையில் எது ஒன்று நல்ல தன்மையை அளிக்கிறதோ அதற்கு மங்களம் என்று பெயர். நம்மை நாமே விரும்பி அதற்குள் சென்று அமர்ந்து கொள்வோம். இப்படிச் செய்யும் சக்திக்கே மங்களம் என்று பெயர். மஞ்சள், குங்குமம், பூஜை, பூக்கள், கோயில் என்று எதையெல்லாம் மங்களத்திற்கு இருப்பிடமாகச் சொல்வோமோ அதற்கெல்லாம் மூலமாக இருப்பவளே ஸர்வ மங்களா. அவளே இவை அனைத்தையும் அளிப்பதாலும் ஸர்வ மங்களா என்று பெயர்.
ஸத்கதி ப்ரதா – ஸத் என்றால் நன்மை என்று பொருள். கதி என்றால் வழி என்று அர்த்தம். இன்னொரு அர்த்தம் அடையக் கூடிய இடம் என்பதாகும். நம் சாதாரண வாழ்விலே கூட, ‘‘என்ன கதியில் போகிறீர்கள்’’ என்றால், என்ன வழியில் போகிறீர்கள் என்று அர்த்தம். ஆன்மிகத்தில் அவன் என்ன கதியை அடைவான் என்றால் அவன் இறுதியாக எந்த ஆன்மிக நிலையை அடைவான் என்பதாகும். கதி என்றால் வழி என்றும், இலக்கு (destination) என்றும் இரண்டு அர்த்தம் உண்டு.
நம்முடைய செல்கின்ற வழியை நல்லதாக்குகிறாள். பின்னர், நாம் அடைய வேண்டிய ஸத் என்று சொல்லக் கூடிய மேலான நிலையை நமக்கு அளிக்கிறாள். பிறகு, நமக்கு என்ன காண்பித்துக் கொடுக்கிறாள் எனில், அந்தப் பாதையாக இருப்பவளும் அவள்தான். நாம் அடையக்கூடிய அந்த ஸத் என்கிற சத்தியமும் அவள்தான். ஸத்கதி என்கிற வார்த்தையின் அர்த்தமே அவள்தான். பாதையும் அவளே. அடைய வேண்டிய இடமும் அவளே. The path is not different from destination.
ஸர்வேச்வரீ – ஈஸ்வரி என்றால் எல்லாவற்றிற்கும் அவளே தலைவி. அவள்தான் எல்லாவற்றையும் அடக்கி ஆளக் கூடியவள்
ஸர்வமயீ – ஸர்வேஸ்வரி என்று சொல்லும்போது எல்லாவற்றிற்கும் மேலே அவள்தான். இப்படிச் சொல்லும்போது நம்மையும் அறியாமல் அம்பிகையை பிரித்துக் கொண்டுபோய் எங்கேயோ உட்கார வைத்து விடுகின்றோம். அதை இந்த நாமாவைக் கொண்டே வசின்யாதி வாக்தேவதைகள் உடைத்து விடுகிறார்கள். அவள் சர்வேஸ்வரி என்று சொல்லிவிட்டு எங்கேயோ கொண்டுபோய் உட்கார வைத்து விடாதே… அவள் சர்வ மயீ ஆவாள். சித் வஸ்துவாக இருக்கட்டும். ஜட வஸ்துவாக இருக்கட்டும். ஒவ்வொன்றுக்குள்ளும் அவள் நிறைந்து… நிறைந்து இருப்பதால் அவள் சர்வமயீ என்பதாவாள். பாரதியார் இதைத்தான் எங்கெங்கு காணிணும் சக்தியடா என்றும், யாதுமாகி நின்றாய் காளி நீ என்றும் பாடியிருக்கிறார்.
ஸர்வ மந்த்ர ஸ்வரூபிணீ – மேலே சொன்ன நாமாக்களின் மூலமாக சர்வ சக்திமயீ, சர்வ மங்களா, சர்வமயீ, சர்வேஸ்வரி என்றெல்லாம் பார்த்தோம் அல்லவா. அப்படிப்பட்ட அம்பிகையை எப்படி தெரிந்து கொள்வது? என்கிற கேள்வி வருகிறதல்லவா? எத்தனையோ மார்க்கங்களாக யோக, ஞான, பக்தி… என்றெல்லாம் இருக்கிறது. ரிஷிகள் இவை எல்லாவற்றையும் பிழிந்து எடுத்து மந்திரங்களாக கொடுத்திருக்கிறார்கள். அதை குரு மூலமாக சித்திக்கக் கூடிய மந்திரம். அது என்ன மந்திரமாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், இந்த மந்திரம் மூலமாக அம்பாளின் இந்த நிலைகளையெல்லாம் நாம் உணரலாம்.
நமக்கு என்ன மந்திரமானது உபதேசிக்கப்பட்டிருக்கிறதோ அதன் மூலம் அம்பாளை அறிந்து கொள்கிறோம். அப்போது நமக்கு ஒரு விஷயம் புரியவரும். அது என்னவெனில், எல்லா மந்திர ரூபமாகவும் அம்பாள்தான் இருக்கிறாள். ஸ்ரீவித்யா மந்திர ரூபமாக மட்டுமல்லாமல், சிவன், விஷ்ணு, முருகன், விநாயகர் என்று எல்லா மார்க்க மந்திரங்களினுடைய சொரூபமாக அவள் இருப்பதால் சர்வ மந்த்ர சொரூபிணீ என்று இங்கு வர்ணிக்கப்படுகிறாள்.
இன்னொரு சூட்சுமமான விஷயம் என்ன வெனில், மந்திரம் என்கிற வார்த்தைக்கு செயல்படுத்துதல் என்கிற ஒரு அர்த்தம் உண்டு. ஒரு ராஜாவிற்கு ஆலோசனை கொடுத்து செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருப்பவரை மந்திரி என்று சொல்கிறோம். அந்த மந்த்ரி என்பவரே ஒரு ராஜாவை இதெல்லாம் செய்யலாம். இதெல்லாம் செய்யக் கூடாது என்று செயல்படுத்துவார்.
இப்படி இந்த மொத்த பிரபஞ்சத்தையும் அவள் செயல்படுத்தக் கூடியவளாக இருப்பதால் அம்பிகைக்கு சர்வ மந்த்ர சொரூபிணீ என்று அழைக்கப்படுகிறாள். ஆங்கிலத்தில் spell என்று சொல்வோம். அதாவது அவளுடைய ஒரு வார்த்தையினால்… ஒரு சங்கல்பத்தினால்… இவை எல்லாமும் நடந்து கொண்டிருக்கிறது.
ஸர்வ யந்த்ராத்மிகா – ஒன்றை இயக்க வேண்டுமென்றால் அங்கு ஒரு பொருள் இருக்க வேண்டும். காரோ, இரு சக்கர வாகனமோ அல்லது நாம் இயக்க வேண்டிய பொருள் ஒன்று இருக்கிறதல்லவா அதற்கு யந்த்ரம் என்று பெயர். இயக்குவதற்கு மந்த்ரம் என்று பெயர். இயங்கக் கூடிய பொருளுக்கு மந்த்ரம் என்று பெயர். அதனால்தான், தமிழில் நாம் எந்திரங்கள் என்று சொல்கிறோம். எந்திரம் என்பதே யந்த்ரம் என்கிற சமஸ்கிருத வார்த்தைதான்.
எனவே, இந்த மொத்தப் பிரபஞ்சமும் அவளுக்கு யந்த்ரமாக இருக்கிறது. இதை ஒரு கருவியாக்கி தன்னுடைய சக்தி என்கிற மந்திரம் மூலமாக இந்த யந்த்ரத்தை அவள் இயக்குகிறாள். அதனால் அவளுக்கு சர்வ யந்த்ராத்மிகா என்று பெயர். இந்த ஒட்டு மொத்த யந்த்ரத்திற்குள்ளும் அவள் நிறைந்திருக்கிறாள். அதனால்தான் ராமகிருஷ்ண பரமஹம்ஸர் அம்பாளிடம் நிறைய முறை மே யந்த்ர; துமீ யந்த்ரீ என்பார். நான் யந்திரம் அம்மா. நீதானம்மா என்னை இயக்கக் கூடியவள் என்று சொல்வார். அதனால், அந்த இயக்கக் கூடிய பொருட்களிலும் அவள் ஆத்மாவாக இருக்கிறாள்.
உபாசனைப் பூர்வமாக பார்த்தால், ஒவ்வொரு தேவதைக்கும் ஒரு யந்த்ரம் இருக்கிறது. கணபதி, சுப்ரமணியர், சிவன், மகாவிஷ்ணு என்று எல்லாவற்றிற்கும் ஒரு யந்த்ரம் இருக்கிறது. ஸ்ரீவித்யா சம்பிரதாயத்தில் அம்பாளுக்கென்றே ஒரு யந்த்ரம் இருக்கிறது. அதற்கே, ஸ்ரீசக்ரம் என்று பெயர். அதற்குள் எல்லா தேவதா மூர்த்தங்களும் இருக்கின்றன. எப்படி மந்த்ரங்களின் ரூபமாக இருக்கிறாளோ… அதேபோல எல்லா யந்த்ரங்களின் ரூபமாகவும் இருக்கிறாள். ரிஷிகள் மந்திரங்களை அளித்ததுபோல், இந்த யந்த்ரங்களும் கொடுத்திருக்கிறார்கள். அதை பூஜித்தால் உடனடியாக அங்கு சக்தி உருவாகி வருகின்றது.
இப்படி ஸ்ரீசக்ர சொரூபிணீயாக இருப்பதால் சர்வ யந்த்ராத்மிகா என்று பெயர். ஸர்வ தந்த்ரரூபா – ஒரு கார் இருக்கிறது. அதை எப்படி இயக்க வேண்டுமென்று கற்றுக் கொள்கிறோம். நாம் இயக்கியவுடனேயே அது இயங்கிவிட்டதா என்றால், இல்லை. இதில் ஒரு முடியாத விஷயத்தை பார்க்கிறோம். எனவே, எப்படி இயங்க வேண்டுமென்று தெரிந்தால்தான் அதை இயக்க முடியும். அதனால்தான் நாம் எந்தவொரு பொருள் வாங்கினாலும் user manual என்று ஒன்றை கொடுப்பார்கள். அதை வைத்துக் கொண்டு எப்படி இயக்க வேண்டுமென்று தெரிந்து கொண்டு பிறகு அதை இயக்குவோம்.
மநோன்மநீ – இந்த பேரறிவு விளங்க வேண்டும் என்று சொல்கிறோம். இது எப்போது வெளிப்படும். மனசு என்று சொல்லக் கூடியது எப்போது அதிகூர்மையாகிறதோ அப்போதுதான் தந்த்ரம் என்று சொல்லக் கூடிய அறிவு வெளிப்படும். அந்த அறிவின் மூலமாக யந்த்ரம் என்கிற பிரபஞ்சத்தை தெரிந்து கொள்வோம். அப்படியே ஒன்றுக்குள் ஒன்றாக அம்பாளின் சக்தியை தெரிந்து கொள்கிறோம். இப்படி எல்லாவற்றிற்கும் அடிப்படையான மனமானது கூர்மையாக மாற வேண்டுமெனில், யோக மார்க்கத்தில் அதற்கு ஒரு நிலை சொல்லப்பட்டிருக்கிறது. அதற்குத்தான் உன்மநீ பாவம் (bhavam) என்று பெயர். உன்மநீ அவஸ்தை என்று பெயர். நம்முடைய மனமானது அந்த உன்மநீ அவஸ்தை அல்லது உன்மணீ பாவத்தை அடையும்போது அந்த நிலையைத்தான் மனோன்மநீ என்று அழைக்கிறார்கள். இந்த மனோன்மநீயாக இருப்பது அம்பாள்தான்.
இந்த நிலையை சாஸ்திரம் எப்படி வர்ணிக்கிறது தெரியுமா?
கண்கள் மூடாமலும், திறக்காமலும் அரைக்கண் மூடியதுபோல் இருக்கும். அதேநேரத்தில் அறிவு ஒருமைப்பட்டிருக்கும். இதுவொரு முறையை சொல்வது அல்ல. இயற்கையாக தானாக நிகழக் கூடிய விஷயம். ஆரம்ப நாட்களில் கையை இப்படி வைத்துக் கொள். கண்களை இப்படி மூடுங்கள். மூச்சு அடங்கி இருக்க வேண்டும். என்பதெல்லாம் தொடக்க நிலையில் சரிதான். ஆனால், இதெல்லாம் சகஜமாக அவனுக்குள்ளேயே நிகழும். அப்போது அவன் எந்த வேலையையும் செய்ய மாட்டானா என்றால் அதெல்லாம் இல்லை. பேசுவான், சிரிப்பான், கோபம் கூட வரும். வெளிப்புறத்தில் எல்லார் மாதிரியும்தான் நடந்து கொள்வான். ஆனால், மனசு மட்டும் ஒடுங்கி அந்த நிலையிலேயே இருக்கும். இந்த நிலைக்குத்தான் மனோன்மநீ என்று பெயர்.
நாம் இப்போது பார்த்துக் கொண்டே வரும் இரண்டு ஸ்லோகங்களின், நாமங்களின் இருதய ஸ்தானமே இந்த மனோன்மநீ ஆகும். எப்படி லலிதா சஹஸ்ரநாமத்தினுடைய ஒவ்வொரு ஸ்லோகத்திலேயும் அம்பாளினுடைய மந்திரப் பூர்வமான நாமம் இருக்கிறதென்று சொல்கிறோமோ… அதுபோல இந்த இரண்டு ஸ்லோகத்திற்குள் இந்த மனோன்மநீ என்கிற இந்த நாமமே அதிமுக்கியமானதாகும்.
ஒரு உதாரணமாக, சிவன் கோயில்களில் சுவாமிக்கு ஈசான பாகத்தில் இடப்புறத்தில் ஒரு அம்பாள் எப்போதும் மூல ஸ்தானத்திற்குள்ளேயே இருப்பாள். அந்த அம்பாளுக்குத்தான் மனோன்மநீ என்று பெயர். அம்பிகைக்கு எப்போதும் தனி சந்நதியாக மீனாட்சி, அகிலாண்டேஸ்வரி என்று தனித்தனி சந்நதிகளில் இருப்பாள். ஆனால், சுவாமி சந்நதிக்குள்ளேயே இடப்புறத்தில் சூட்சும சொரூபிணீயாக ஒரு அம்பாள் இருப்பாள். அவளுக்கே மனோன்மநீ என்று பெயர்.
இந்த நாமம் நமக்கு என்ன காண்பித்துக் கொடுக்கிறதெனில், நம்முடைய மனதானது இப்படித்தான் ஒடுங்கி ஆத்மாவிற்கு முன்னால் உட்கார்ந்திருக்க வேண்டுமென்பதை காண்பிக்கிறது. அங்கு சிவமாக லிங்கமாக இருப்பது ஆத்மா. ஆத்மாவில் ஒடுங்கின மனசாக அம்பாள் உட்கார்ந்திருப்பாள். அவளுக்குத்தான் மனோன்மநீ என்று பெயர். மீனாட்சி, காமாட்சி என்றெல்லாமும் செயல்படுபவளே இங்கு ஒடுங்கி மனோன்மநீயாக இருக்கிறாள். வெளியே எத்தனையோ ரூபங்களில் இருந்தாலும், உள்ளே இப்படியும் இருக்கிறாள். இப்படித்தான் நம்முடைய மனமும் இருக்க வேண்டும். மனோன்மநீ ஆக வேண்டும்.
மாஹேஸ்வரீ – மஹேஸ்வரனாக இருக்கக் கூடிய இறைவனுக்கு சக்தியாக இருக்கக் கூடியவள் மாஹேஸ்வரீ. அவளே எல்லாவற்றிற்கும் பெரியவளாக இருப்பதால் மாஹேஸ்வரீ. மஹா தேவீ – மஹாதேவனாக இருக்கக் கூடிய இறைவனுக்கு சக்தியாக இருக்கக் கூடியவள். எல்லாவற்றையும் தனக்கு உரியதாகக் கொண்டவள். அதனால், மஹாதேவீ என்று அழைக்கப்படுகிறாள்.
மஹாலக்ஷ்மி – அந்த சக்தியானது விஷ்ணுவாக இருந்து ஸ்திதி பண்ணும்போது, சக்தியாக இருந்து இந்த ஸ்திதி என்கிற தொழிலைச் செய்வதால் அவளுக்கு மஹாலக்ஷ்மி என்று வர்ணிக்கப்படுகிறாள். ம்ருட ப்ரியா – பொதுவாக ம்ருட என்றால் சிவம் என்று அர்த்தம். ம்ருட ப்ரியா என்றால் சிவனுக்கு ப்ரியமானவள். அல்லது சிவனுக்கு தன்னை ப்ரியமாகக் கொண்டவள். எனவே,ம்ருட ப்ரியா என்று அழைக்கப்படுகிறாள்.
இப்போது இந்த இடத்தில் இந்த நாமங்களை கொஞ்சம் பின்னாலிருந்து பார்க்க வேண்டும். ம்ருட ப்ரியா, மஹாலக்ஷ்மி, மஹா தேவீ, மாஹேஸ்வரீ, மநோன்மநீ என்று பார்க்க வேண்டும்.
ஏன் இதனை பின்னோக்கி பார்க்க வேண்டும்?
ம்ருட ப்ரியா என்றால் சிவனுக்கு பிரியமானவள் என்று பார்த்தோம் அல்லவா. எப்போது சிவமும் சக்தியும் பிரியமாகி தனக்குள் ஒன்று சேருகிறதோ… அந்த சிவசக்தி ஐக்கியத்தில்தான் இந்த பிரபஞ்சம் உண்டாகிறது என்று பார்த்திருக்கிறோம். அப்போது ம்ருட ப்ரியா என்கிற நாமமானது சிருஷ்டி என்கிற விஷயத்தை குறிக்கிறது.
இதற்கு முந்தைய நாமமாக மஹாலக்ஷ்மி. இப்போது சிருஷ்டி நடந்து அந்த பிரபஞ்சத்தை ஸ்திதி பண்ண வேண்டும். அந்த பிரம்மமானது தன்னை விஷ்ணுவாக வெளிப்படுத்திக் கொள்கிறது. அந்த விஷ்ணுவிற்கு சக்தியாக மகாலக்ஷ்மியாக இருக்கிறாள்.
இதற்கு முன்னால் மகாதேவி என்று பார்க்கிறோம். ருத்ரனுக்கு மகாதேவன் என்று பெயர். அவர்தான் சம்ஹாரம் பண்ணக் கூடியவர். சம்ஹாரம் பண்ணக் கூடிய ருத்ரனான மஹாதேவனுக்கு சக்தியாக இருக்கக் கூடியவள் மகாதேவி. அதனால் இந்த நாமம் சம்ஹாரத்தை காண்பித்துக் கொடுக்கிறது.
இதற்கு முன்னால், மாஹேஸ்வரி. இப்படி எல்லாவற்றையும் செய்தாலும் வெளிப்படையாக காண்பிக்காமல் மறைத்து வைத்திருக்கிறாள் அல்லவா… அப்படி மறைத்து வைப்பது… திரோதாணம் என்கிற செய்கிறாள். இப்படி மகேஸ்வரனுக்கு சக்தியாக இருப்பதால் மாஹேஸ்வரி.
அது சரி, இவை அனைத்தையும் ஏன் செய்ய வேண்டும். நம்மை நம்முடைய சொரூபத்தில் நிறுத்துவதற்காக. அனுக்கிரகம் பண்ணுவதற்காக. அருளல் பண்ணுவதற்காக செய்ய வேண்டும். அதை யார் மூலம் செய்கிறாள் எனில் சதாசிவம் மூலமாக செய்கிறாள். அந்த சதாசிவத்திற்கு சக்தியாக இருப்பவளே மனோன்மநீ ஆவாள். கீழிருந்து பார்த்தோமானால் ம்ருட ப்ரியா என்பது சிருஷ்டியையும், மஹாலட்சுமி என்பது ஸ்திதியையும், மஹாதேவி என்பது சம்ஹாரத்தையும், மாஹேஸ்வரி திரோதாணத்தையும், மனோன்மநீ என்பது அனுக்கிரகத்தையும் குறிக்கும்.
நாம் லலிதாம்பிகை படத்தை பார்க்கும்போது பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மகேஸ்வரன் என்கிற நான்கு கால்கள் இருக்கும். அவள் உட்கார்ந்து இருக்கக் கூடிய பலகையாக சதாசிவ மூர்த்தி இருப்பார். அதன்மீது லலிதாம்பாள் இருப்பாள். இதைத்தான் இந்த நாமங்கள் நமக்கு உணர்த்துகின்றன.
இந்த பதிமூன்று நாமங்களுக்கான கோயிலைப் பார்ப்போமா!
சென்னை – ரெட்ஹில்ஸ் தாண்டி வரும் பஞ்சேஷ்டி என்றும், தற்போது பஞ்செட்டி என்று அழைக்கப்படும் தலத்தை சொல்லலாம். அகஸ்திய மஹரிஷி ஐந்து இஷ்டி என்கிற யாகம் செய்ததால் பஞ்சேஷ்டி என்று பெயர். அகஸ்தியர் பூஜை செய்ததால் அகஸ்தீஸ்வரர் என்று பெயர். அம்பாளுக்கு ஆனந்தவல்லி என்று பெயர். என்ன ஆச்சரியமெனில், இந்த நாமங்களில் வரும் . ஸர்வமந்த்ர ஸ்வரூபிணீ, ஸர்வ யந்த்ராத்மிகா, ஸர்வ தந்த்ரரூபா, மநோன்மநீ என்று சொல்வதற்கு இங்கு பிரத்யட்சமாக ஒரு விஷயம் இருக்கிறது.
அகஸ்தியர் பூஜை செய்து அம்பாளுக்கு முன்னால் ஒரு யந்த்ரம் பிரதிஷ்டை செய்திருக்கிறார். மந்திரங்களை சொல்லி யந்த்ரங்களை வரைந்திருக்கிறார். பொதுவாக ஸ்ரீசக்ரம்தான் பிரதிஷ்டை செய்வார்கள். ஆனால், இங்கு ஆனந்தவல்லிக்கு முன்னால் மனோன்மநீ யந்த்ரம் பிரதிஷ்டை செய்திருக்கிறார். சூட்சுமமாக அம்பாள் மனோன்மநீ சொரூபமாக இருக்கிறாள். ஆனால், அம்பாளுக்கு ஆனந்தவல்லி என்று பெயர். இப்படி சர்வ யந்த்ராத்மிகா என்று யந்திரத்தையும், மேலும், அகஸ்தியர் செய்த பூஜை என்கிற தந்த்ரத்தினால் சுவாமியும் அம்பாளும் எழுந்தருளி இருக்கிறார்கள். அது எப்படியெனில், அம்பாள் மனோன்மநீ சொரூபமாக எழுந்தருளி இருக்கிறாள்.
(சுழலும்…)
