அவிநாசி: அவிநாசி அருகே சூறாவளிக்கு 20 ஏக்கரில் ரூ.2 கோடி வாழைகள் முறிந்து சேதமானது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டாரத்தில் விவசாயிகள் 20 ஏக்கர் பரப்பளவில் வாழை மரங்களை பயிரிட்டிருந்தனர். கடந்த இரண்டு நாட்களாக இந்த பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதில் அவிநாசி கருமாபாளையம், சேவூர், போத்தம்பாளையம், புஞ்சைத்தாமரைக்குளம், மங்கரசவலையபாளையம், பொகளூர் உள்ளிட்ட இப்பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த வாழைகள் முறிந்து சாய்ந்து சேதமடைந்தன. இதனால் சுமார் இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
