ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி மற்றும் மேலுமலை சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று முன்தினம் மாலை, திடீரென பலத்த சூறைக்காற்றுடன் கனமழை சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த ஏலக்கி இளம்பருவ வாழை மரங்கள் காற்றுக்கு முறிந்து சாய்ந்து சேதமடைந்தன.
மேலுமலையை சேர்ந்த மாற்றுத்திறனாளி விவசாயி அன்பரசன் (48) என்பவரது வாழை தோட்டம் அதிகம் சேதமடைந்தது. மழை நின்ற பிறகு அதிகாலை தோட்டத்திற்கு சென்று பார்த்த அவர் மற்றும் குடும்பத்தினர் சாய்ந்து கிடந்த வாழை மரங்களை கண்டு வேதனையடைந்தனர்.
இது குறித்து விவசாயி அன்பரசன் கூறுகையில், கடந்த 8 மாதமாக வளர்த்த வாழை ஒரே இரவில் சாய்ந்து சேதமானது. ஒரு ஏக்கருக்கு ரூ.2 லட்சம் என இரண்டு ஏக்கருக்கு இதுவரை ரூ.3.80 லட்சம் செலவு செய்தோம். 1800 வாழைக்கன்றில், 1200 வாழைக்கன்றுகள் நாசமாகி விட்டது. எனவே, அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு இழப்பீடு பெற்றுத் தர வேண்டும்,’ என்றார்.
