- பவுர்சத்ரம் மார்கெட்
- பவுர்சத்திரம்
- தென்காசி மாவட்டம்
- பவுர்சத்ரம் காமராஜ்
- தூத்துக்குடி மாவட்டம்
- ஏரல்
- குரும்பூர்
- திருச்செந்தூர்
*நாட்டுத்தார் ரூ.600, ரோபஸ்டா,பூவன் தலா ரூ.500க்கும் விற்பனை
பாவூர்சத்திரம் : வரத்து குறைவால் பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் வாழைத்தார்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காமராஜர் தினசரி மார்க்கெட்டிற்கு தூத்துக்குடி மாவட்டம் ஏரல், குரும்பூர், திருச்செந்தூர், ஆரல்வாய்மொழி, நாசரேத்தில் இருந்தும், நெல்லை மாவட்டம் காவல்கிணறு, வள்ளியூர், அம்பாசமுத்திரம், முக்கூடல், விகேபுரம், தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி, கடையம், பாப்பான்குளம், அச்சன்புதூர், இலஞ்சி, வடகரை, ராஜபாண்டி, துவரங்காடு, சுந்தரபாண்டியபுரம் பகுதிகளிலிருந்தும் வாழைத்தார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
அவ்வாறு விற்பனைக்கு வரும் வாழைத்தார்கள் கேரளா மொத்த வியாபாரிகள் ஏலத்திற்கு எடுத்து திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, கோழிக்கோடு உள்பட பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டத்தில் பலத்த சூறைக் காற்றால் பல்லாயிரக்கணக்கான வாழைகள் முறிந்து, பயிரிடப்பட்ட வாழைகள் விளைச்சல் இல்லாமல் போய் விட்டது.
இதனால் பாவூர்சத்திரம் காமராஜர் தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு வாழைத்தார்களின் வரத்து கடந்த சில நாட்களாக குறைந்துள்ளது. அதாவது சராசரியாக 2000 முதல் 3000 வரை வாழைத்தார்கள் வரை விற்பனைக்கு வரும். ஆனால் தற்போது தினமும் சராசரியாக 200 முதல் 500 வாழைத்தார்கள் வரை தான் விற்பனைக்கு வருகின்றன. தென்காசி மாவட்டத்தில் இருந்தும் குறைந்த அளவே வாழைத்தார்கள் விற்பனைக்கு வருகிறது. மொத்தத்தில் தினமும் 500லிருந்து 1000 வாழைத்தார்கள் விற்பனைக்கு வருகிறது.
இதனால் வரத்து குறைவால் உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட வியாபாரிகள் தங்கள் தேவைக்கேற்ப வாழைத்தார்களை கொள்முதல் செய்வதால் இதுவரை இல்லாத அளவிற்கு விலை கூடுதலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரம் ரூ.200க்கு விற்ற நாட்டுத்தார் ரூ.600க்கும், ரோபஸ்டா ரூ.200 முதல் ரூ.500க்கும், ரூ.200க்கு விற்ற பூவன் வாழை 500க்கும், 1 கிலோ ரூ.30 விற்ற செவ்வாழை ரூ.60க்கும், ஏத்தம் 1 கிலோ ரூ.50க்கும், ரூ.200க்கு விற்ற கற்பூரவள்ளி ரூ.800க்கும், கோழிக்கோடு ரூ.200லிருந்து ரூ.400க்கும், கதலி ரூ.100லிருந்து ரூ.350க்கும், சக்கை வாழை கிலோ ஒன்றுக்கு ரூ.10லிருந்து ரூ.30க்கும் விற்கப்பட்டு வருகிறது. அதேபோல் இலை 200 எண்ணம் கொண்ட இலை கட்டுகள் ரூ.300லிருந்து 900 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
