- வடக்கு
- தூத்துக்குடி மாவட்டம்
- தூத்துக்குடி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- குஜராத்
- இந்தியா
- தூத்துக்குடி மாவட்டம்
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுக்காண்டு உப்பள பணியில் ஈடுபடும் வடமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இந்தியாவில் உப்பு உற்பத்தியில் குஜராத்திற்கு அடுத்ததாக தமிழகம் 2ம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் உப்பு உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது.
இங்கு வேம்பார் முதல் பெரியதாழை வரை சுமார் 24 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த தொழிலில் உப்பு வாருதல், கோடு போடுதல், உப்பு அள்ளுதல் என நேரடியாகவும், உப்பு பண்டல் கட்டுதல், உப்பு மூடை பிடித்தல், லோடுமேன்கள் என பல்வேறு பணிகளில் சுமார் 75 ஆயிரம் பேர் உப்பு சார்ந்த பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.
மேலும் உப்பளங்களில் தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடு உள்ள நிலையில் வெளியூர்களில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வந்து முக்கிய பணிகளில் ஈடுபடுத்தி வந்தனர். ஆனால் தற்போது வடமாநில தொழிலாளர்களை அழைத்து வந்து உப்பள பணிகளில் ஈடுபடுத்தி வருகின்றனர்.
குறிப்பாக பீகார், ஒடிசா, கொல்கத்தா, மத்தியபிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் இங்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். இவர்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் நவம்பர் வரையில் இந்த வேலை இருக்கும்.
பல இடங்களில் தற்போது உள்ளூர் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கூலி போலவே அவர்களுக்கும் வழங்கப்படுகிறது. தீபாவளி போனஸ், இருப்பிடம், உணவு, குடிநீர், காய்கனிகள் உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது. பல உப்பளங்களில் வடமாநில தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து வரும் பணிகளில் இங்குள்ள பலர் புரோக்கர்களாக செயல்பட்டு, ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை பணிக்கு அழைத்து வருகின்றனர்.
இதற்காக அந்த லேபர் புரோக்கர்களுக்கு ஒரு கணிசமான தொகை கிடைக்கிறது. சில உப்பளங்களில் வடமாநில தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை என்ற அடிப்படையில் பணி வழங்கப்பட்டு அவர்களுக்கு தினக்கூலியாக ரூ.800ம் வழங்கப்பட்டு வருகிறது.
உள்ளூர் தொழிலாளர்களுக்கு சில மணி நேரங்கள் மட்டுமே வேலை என்ற நிலையிலும் நிர்ணயிக்கப்பட்ட கூலி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய சூழலில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஒரு உப்பளத்தில் 15 முதல் 20 பேர் வரை வடமாநில தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளாக வடமாநில தொழிலாளர்கள் உப்பள தொழிலில் தங்களது ஆதிக்கத்தை செலுத்த துவங்கி உள்ளனர்.
உள்ளூர் தொழிலாளர்கள் உப்பு உற்பத்தி தொடர்பான பணிகளில் குறைந்து வரும் நிலையில் வடமாநில தொழிலாளர்கள் வருகை பல்வேறு தொழில்களை தொடர்ந்து உப்பளத்திலும் அதிகரித்து வருகிறது.
மாவட்டம் முழுவதும் தற்போது 2000க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் உப்பு உற்பத்தி மற்றும் சார்புடைய தொழில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தீபாவளிக்கு சில தினங்கள் முன்பு வரையில் பணியில் தொய்வின்றி ஈடுபடும் இவர்கள் அதன் பின்னர் போனஸ் உள்ளிட்டவற்றை பெற்றுக்கொண்டு சொந்த ஊர் திரும்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
லேபர் காண்ட்ராக்டர்கள் அதிகரிப்பு
வடமாநில தொழிலாளர்களை உப்பள பணிகளுக்கு அனுப்பி வைக்கும் லேபர் காண்டிராக்டர்களும் தொழிலாளர்களின் கூலியில் இருந்து ஒரு கணிசமான தொகைகளை பிடித்துக் கொண்டுதான் அவர்களுக்கு கூலி பணத்தை வழங்குகின்றனர்.
வடமாநில தொழிலாளர்கள் அதிகரித்து வரும் அதே நேரத்தில் அவர்களை அங்கிருந்து அழைத்து வந்து ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தும் லேபர் காண்டிராக்டர்களும் அதிகரித்து வருகின்றனர்.
உள்ளூர் தொழிலாளர்கள் போல போனஸ், காலணி, கண்ணாடி, தொப்பி, லீவு சம்பளம், யூனியன் உள்ளிட்டவற்றை எதிர்பார்க்காமல் வேலையில் ஈடுபடுவதால் பல உப்பளங்களில் வடமாநில தொழிலாளர்களை பயன்படுத்தும் போக்கு உற்பத்தியாளர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
லாபம் இல்லாவிட்டாலும் தொடரும் வழக்கமான பணி
தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரையில் உப்பளங்களில் உப்பு உற்பத்தி என்பது தற்போது வெயில் அதிகமாக இருப்பதால் கணிசமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டும் அதிக மழை இல்லாததாலும், குஜராத் உப்பு அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டதாலும் தற்போது வரையில் உப்பிற்கான தேவை குறைந்த நிலையில்தான் இருக்கிறது.
இதனால் கடந்த டிசம்பர் மாதம் வரையில் டன் ஒன்றுக்கு ரூ.2800 வரையில் விற்பனை செய்யப்பட்ட உப்பு தற்போது டன் ஒன்றுக்கு ரூ1000 முதல் 1200 வரையிலேயே விற்பனையாகிறது. டேபிள் சால்ட் எனப்படும் அதிவெள்ளை நிற உப்பு மட்டும் டன் ஒன்றுக்கு ரூ.1600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் உப்பு உற்பத்தியாளர்களுக்கு லாபம் இல்லை என்றாலும் கூட உப்பு உற்பத்தியை நிறுத்த முடியாத நிலையில் உப்பளங்களில் வழக்கமான பணிகளை தொடர்ந்து வருகின்றனர்.
ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை
உப்பளங்களில் உப்பு வாருதல், கோடு போடுதல், தண்ணீர் வைத்தல், உப்பு அள்ளுதல் என நேரடி பணிகளில் ஈடுபடுபவர்களில் பெண்களுக்கு 590 ரூபாயும், ஆண்களுக்கு 600 ரூபாயும் கூலியாக வழங்கப்பட்டு வருகிறது.
இவர்கள் காலை 5 மணி முதல் 8.30 மணி அல்லது 9 மணி வரையில் இதுதொடர்பான பணிகளில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு இந்த (மே) மாதம் முதல் கூலி ரூ.700 அல்லது 750 ஆக உயர்த்தப்பட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
