- Okenakkal
- ஏற்காடு
- குரும்பப்பட்டி பூங்காக்கள்
- சேலம்
- குரும்பப்பட்டி பூங்கா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஊட்டி
- கொடைக்கானல்…
*படகு, பரிசல் சவாரி செய்து மகிழ்ச்சி
சேலம் : மே தினத்தை தொடர்ந்து, விடுமுறை என்பதால் ஏற்காட்டிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். இதேபோல் குரும்பப்பட்டி பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை புரிந்தனர். தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானலுக்கு அடுத்தப்படியாக ஏற்காடு மலை பிரதேசத்திற்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
ஏற்காட்டில் ஏரி, படகு இல்லம், மான்பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ஐந்திணை பூங்கா, தாவரவியல் பூங்கா, அண்ணா பூங்கா, சேர்வராயன் கோயில், பக்கோடா பாயிண்ட் உள்ளிட்டவை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கும் இடங்களாகும்.
ஏற்காட்டிற்கு கோடை விடுமுறை மற்றும் முக்கிய விஷேச நாட்களில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.
கடந்த 23ம் தேதி முதல் பள்ளிகளுக்கு முழு ஆண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டது. அன்று முதல் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு வருகை தருகின்றனர். நேற்று மே தினம் என்பதால் அதை கொண்டாட பொதுமக்கள் அவரவர் சொந்த ஊருக்கும், சுற்றுலா தலங்களுக்கும் சென்றனர்.
அந்த வகையில் நேற்று காலை முதலே ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. ஏற்காட்டிற்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏரியில் படகுசவாரி செய்து மகிழ்ந்தனர்.
தாவரவியல் பூங்கா, ஐந்திணை பூங்கா, லேடீஸ் சீட், பக்கோடா பாய்ண்ட் உள்ளிட்ட பகுதிகளை கண்டுகளித்தனர். ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் தள்ளுவண்டி கடைகளில் பஜ்ஜி, காலிபிளவர் சில்லி, பழ வகைகள் விற்பனை களைகட்டியது.
ஓட்டல், ரெஸ்டாரண்டுகளில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்பட்டது. ஏற்காட்டில் தற்போது இதமான சூழ்நிலை நிலவுவதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதேபோல் சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவிற்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். குழந்தைகள் ஊஞ்சலில் விளையாடி மகிழ்ந்தனர். அங்குள்ள பொம்மை மிருகங்கள் முன்பு நின்று செல்பி எடுத்தனர்.
நேற்று மே தினம் விடுமுறை என்பதால் பலர் குடும்பத்துடன் வந்து பொழுதை கழித்தனர். நேற்று ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பென்னாகரம் : தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
நேற்று ஒகேனக்கல்லுக்கு விநாடிக்கு 1200 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர் வரத்தை காவிரி நுழைவிடமான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளந்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், விடுமுறை தினத்தையொட்டி நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர்.
அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து மெயின் அருவி, சினி பால்ஸ் மற்றும் காவிரி ஆற்றின் பல்வேறு இடங்களில் குளித்து மகிழ்ந்தனர். பின்னர், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பாதுகாப்பு உடை அணிந்து, பாறைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசலில் சென்றனர்.மேலும், மீன் அருங்காட்சியகம், முதலைப்பண்ணை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சுற்றிப் பார்த்தனர்.
தொங்கு பாலத்தில் நின்றும், பார்வை கோபுரத்தில் ஏறியும் காவிரி ஆற்றை கண்டு ரசித்தனர். ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் நடைபாதை, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அலைமோதியது. மேலும், அங்குள்ள கடைகள், ஓட்டல்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.
அதே போல், மீன் மார்க்கெட் மற்றும் மீன் வருவல் கடைகளிலும் விற்பனை ஜோராக நடைபெற்றது. நேற்று சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் அசம்பாவிதங்களை தடுக்க போலீசார், ஊர்க்காவல் படையினர், தீயணைப்பு துறையினர் ஆலம்பாடி, மணல் திட்டு, மெயின் அருவி, பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து சென்றனர். மேலும், மெயின் அருவி பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
