×

கொளுத்தும் வெயில், மழையின்றி தண்ணீர் பற்றாக்குறை குப்பக்குறிச்சி குளத்து பாசனத்தில் பாதியாக குறைந்த நெல் சாகுபடி

*பாசன விவசாயிகள் கவலை

நெல்லை : நெல்லை மாவட்ட பாசன குளத்தின் கடைசி குளமாகத் திகழும் சீவலப்பேரி அருகேயுள்ள குப்பக்குறிச்சி குளத்தில் கொளுத்தும் வெயிலாலும், கோடை மழையின்றியும் தண்ணீர் இருப்பு நாளுக்குநாள் குறைந்துகொண்டே வருகிறது. இருப்பினும் ஓரளவு இருக்கும் தண்ணீரை பயன்படுத்தி பாதியளவு நாற்று நடும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம், சீவலப்பேரி அருகே குப்பக்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள குளமானது மாவட்டத்தின் கடைசி குளமாகத் திகழ்கிறது. இக்குளத்திற்கு நெல்லை கால்வாய் மூலம் தண்ணீர் கிடைக்கப்பெறுகிறது.

நெல்லை கால்வாயில் தண்ணீர் திறந்து விடும்போது நயினார்குளம், அருகன்குளம், கட்டுடையார்குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்கள் நிரம்பி மறுகால் பாய்ந்தால்தான் கடைசி குளமான குப்பக்குறிச்சி குளத்திற்கு தண்ணீர் வந்து சேர்ந்து நிரம்பும்.

இந்த நெல்லை கால்வாயின் கடைமடை குளமான குப்பக்குறிச்சி குளம் மூலம் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பாசன வசதி பெறுகிறது. கடந்த ஆண்டு போதிய மழை இல்லாத காரணத்தால் குப்பக்குறிச்சி குளத்தில் விவசாய பணிகளுக்கு தேவையான தண்ணீர் குறைந்த நிலையில் காணப்படுகிறது.நெல்லை மாவட்டத்தில் தற்போது கோடை வெயிலும் கொளுத்தி வருகிறது. இதனால் நீர் நிலைகளில் தண்ணீர் வற்றி வருகிறது.

கோடை மழையும் பெய்யாத நிலையில் குப்பக்குறிச்சி குளத்து பாசன விவசாயிகள் 200 ஏக்கரில் மட்டும் தற்போது நெல் பயிர் சாகுபடி செய்துள்ளனர். கடந்த 15 நாட்களுக்கு முன் நாற்றுகள் நடப்பட்டு தண்ணீர் பாய்ச்சி கண்ணை இமைகாப்பது போல் பாதுகாத்து வருகின்றனர்.

இதே பாசன பரப்பில் பிற விவசாயிகள் கோடைகால சாகுபடியான உளுந்து பயிர் சாகுபடி செய்துள்ளனர். ஆனால் நெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக இன்னும் 90 நாட்கள் தண்ணீர் தேவைப்படுகிறது. கோடை மழையும் கைவிரித்து விட்டதாக விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.

Tags : Kuppakurichi ,Nellai ,Kuppakurichi pond ,Seevalapperi ,
× RELATED மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாளை தொடக்கம்!!