நேபிடாவ்: மியான்மரில் மீண்டும் உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ளது. மியான்மரில் கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில் தற்போது ராணுவத்தின் கை மீண்டும் ஓங்கி வருகிறது. ஆரம்பத்தில் கிளர்ச்சியாளர்களிடம் பல இடங்களை ராணுவம் இழந்தது. அதற்கு பிறகு, கட்டாய ராணுவ சேர்க்கை மூலம் லட்சக்கணக்கான புதிய வீரர்களை திரட்டி, அதிரடி தாக்குதலை தொடங்க உள்ளது.
எதிர்ப்பு படைகளிடையே நிலவும் ஒற்றுமையின்மை மற்றும் சீனாவின் நெருக்கடியால் கிளர்ச்சி குழுக்கள் பலவீனமடைந்துள்ளன. தனது பல கோடி ரூபாய் முதலீடுகளை பாதுகாக்க சீனா அமைதி பேச்சுவார்த்தையை வலியுறுத்துகிறது. இதற்கிடையே, மியான்மர் அதிபராக பொறுப்பேற்றுள்ள மின் ஆங் ஹலைங், ஆயுத குழுக்கள் ஜூலை 31ம் தேதிக்குள் அமைதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த கொடூர போரில் இதுவரை 8 ஆயிரம் பொதுமக்கள் பலியாகியுள்ளனர். “போர் நின்றால் போதும்” என்று மக்கள் தவிக்கின்றனர். ராணுவத்தின் இந்த விஸ்வரூபத்தால் வரும் நாட்களில் போர் மேலும் தீவிரமடையும் என அஞ்சப்படுகிறது.
