மாமல்லபுரத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் சுற்றுலாப் பயணிகளின்றி வெறிச்சோடிய கடற்கரை கோயில்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக சுற்றுலா பயணிகளின்றி கடற்கரை கோயில் வெறிச்சோடி காணப்பட்டது. மாமல்லபரத்துக்கு தினமும் உள்நாடு மற்றும் ஏராளமான வெளிநாட்டு பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்து, செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து மகிழ்ச்சி அடைகின்றனர். மாமல்லபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கத்திரி வெயில் பிறப்பதற்கு முன்பே, கடந்த 25 நாட்களுக்கு மேலாக வெயில் வாட்டி வதைப்பதோடு, அனல் காற்று வீசி வருகிறது. இதனால், உள்ளூர் மக்கள் காலை முதல் மாலை 4 மணி வரை வீட்டிலிருந்து வெளியே வராமல் முடங்கிக் கிடக்கின்றனர். மாலை 4 மணிக்கு பிறகே அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும், பிற தேவைகளுக்கும் வெளியே சென்று வருகின்றனர்.

மேலும், வெயிலுக்கு பயந்து முதியோர்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். சர்க்கரை நோயாளிகள் மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் யாரும் வெயிலில் வெளிவர வேண்டாம் எனவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களாக பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத வகையில், மாமல்லபுரத்தில் வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால், மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகம் நேற்று சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Related Stories: