சென்னை: ஒரே நாளில் 2வது முறையாக தங்கம் விலை அதிரடியாக குறைந்து பவுனுக்கு ரூ.1600 குறைந்ததால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்கத்தின் மீதான முதலீடு எப்போதும் இல்லாத வகையில் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. கடந்த 2025ம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு பவுன் ரூ.50ஆயிரத்தை கடந்த நிலையில், தற்போது ரூ.1.34 லட்சத்தை எட்டியுள்ளது.
இந்த சூழலில் தான், அமெரிக்கா இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் காரணமாக, திடீரென முதலீட்டாளர்கள் தங்கத்திற்கு பதிலாக, கச்சா எண்ணெய் மீது கவனத்தை திருப்பியதால், திடீரென தங்கம் விலை பவுனுக்கு ஒரு லட்சத்துக்கு சரிந்தது. ஆனால், அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்து அதிர்ச்சியை கொடுத்தது. இந்நிலையில், தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களாகத் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.130 குறைந்து ஒரு பவுனுக்கு ரூ.1,040 வரை விற்பனையானது. தொடர்ந்து நேற்றும் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்தது. அதுவும் காலை, மாலை என ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1600 குறைந்தது நகைப் பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதன்படி நேற்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.150ம், பவுனுக்கு ரூ.1,200ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.13,950க்கும், ஒரு பவுன் ரூ.1,11,600க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று மாலையில் பவுனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,11,200க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,900க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,600 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடர் வீழ்ச்சி காரணமாக நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களுக்காக நகை வாங்க திட்டமிட்டுள்ள நடுத்தர குடும்பத்தினருக்கு இந்த விலை குறைவு ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாக கருதப்படுகிறது.
