கேரள மக்களை குலை நடுங்க வைக்கும் பாம்புகள்.!! 3 நாட்களில் 6 பேர் பலி…

திருவனந்தபுரம்: அண்டை மாநிலமான கேரளாவில் சமீப காலமாக பாம்புக்கடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கேரளாவில் சமீப நாட்களில் பாம்பு கடித்து 6 பேர் வரை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் வாட்டி வதைக்கும் கோடை வெப்பம் கேரளாவிலும் தகித்து வருகிறது. அங்கு நிலவும் கடும் வெப்பம் பாம்புகளை மனித குடியிருப்புகளுக்கு அருகில் செல்ல தூண்டும் காரணத்தால், இந்த கோடையில் கேரளாவில் பாம்புக்கடி மரணங்கள் கவலை அளிக்கும் விதமாக அதிகரித்துள்ளன. மூன்றே நாட்களில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகளும் நிபுணர்களும் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஏப்ரல் 20 முதல் ஏப்ரல் 26 வரை, கேரளாவின் ஆறு மாவட்டங்களில் பாம்பு கடி மரணங்கள் பதிவாகியுள்ளன. இதுவே இந்த கோடை பருவத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான வாரமாக அமைந்துள்ளது. மாநில சுகாதார துறை பதிவுகளின்படி, கேரள மாநிலத்தில் 2023-24ல் 34 பாம்புக்கடி மரணங்களும், 2024-25-ல் 30 மரணங்களும் பதிவாகியுள்ளன. ஏப்ரல் 2025 முதல் ஏப்ரல் 2026 முதல் வாரம் வரை, மாநிலத்தில் 19 பாம்புக்கடி மரணங்கள் பதிவாகியுள்ளன.

ஆனால் சமீப வாரத்தில் பதிவாகி இருக்கும் அதிக அளவிலான பாம்புக்கடி மரணங்கள், கடந்த ஆண்டுகளை விட நடப்பு சீசனில் அதிக உயிரிழப்புகள் பதிவாக காரணமாக கூடும் என்ற கவலையை அதிகாரிகளிடையே ஏற்படுத்தி உள்ளது. கடும் கோடை வெப்பம் பாம்புகளை அவற்றின் இயற்கையான வாழ்விடங்களிலிருந்து வெளியேற செய்து, மனிதர்கள் வசிக்கும் குளிர்ச்சியான இடங்களுக்கு செல்ல தூண்டுவதே சமீப பாம்புக்கடி மரணங்கள் அதிகரிப்புக்கு காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதே போல கோடைக்காலமானது கட்டுவிரியன், ரஸ்ஸல்ஸ் வைப்பர், ஸ்பெக்டக்கிள்ட் கோப்ரா மற்றும் சா-ஸ்கேல்ட் வைப்பர் ஆகிய நான்கு பெரிய விஷ பாம்புகளின் முட்டை பொரிக்கும் பருவத்துடன் ஒத்து போவதையும் நிபுணர்கள் சுட்டி காட்டி இருக்கிறார்கள்.

இதனிடையே பாம்புக்கடி சிகிச்சைக்கான அணுகல் மேம்பட்டு வரும் நிலையிலும், மருத்துவமனை உட்கட்டமைப்பில் இருக்கும் குறைபாடுகளை மருத்துவர்கள் சுட்டி காட்டியுள்ளனர். பாம்பு விஷமுறிவு மருந்தைச் செலுத்துவதால், உயிருக்கு ஆபத்தான அனாஃபைலாக்ஸிஸ் உள்ளிட்ட கடும் ஒவ்வாமை எதிர்வினைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுபோன்ற சமயங்களில் வென்டிலேட்டர்கள், தீவிர கண்காணிப்பு மற்றும் தொடர்ச்சியான மருத்துவ மேற்பார்வை தேவைப்படுவதாக கேரள அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related Stories: