×

அமைச்சரவையில் மாற்றம் செய்யக் கோரி கர்நாடக காங். எம்எல்ஏக்கள் 23 பேர் டெல்லியில் முகாம்: மே 4ம் தேதி தேர்தல் முடிவுக்கு பின் அதிரடி

பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த 2023ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைக்கப்பட்ட போது, இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை முதல்வர் பதவியில் மாற்றம் செய்யப்படும் என்ற வியூகம் வகுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், சட்டசபை கொறடா அசோக் பதான் மற்றும் மூத்த தலைவர் டி.பி. ஜெயச்சந்திரா தலைமையில் 20 முதல் 23 மூத்த சட்டமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் முகாமிட்டு காங்கிரஸ் மேலிடத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

தங்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்பதற்காக தற்போதுள்ள அமைச்சரவையில் அதிரடி மாற்றங்களை செய்ய கோரி அவர்கள் வலியுறுத்துகின்றனர். வரும் மே 4ம் தேதி தமிழகம், கேரளா உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் மற்றும் கர்நாடகாவின் தாவணகெரே தெற்கு, பாகல்கோட் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் அமைச்சரவை மாற்றம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறும் போது, ‘தேர்தல் பணிகள் முடிந்த பிறகு, மே மாதத்தின் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் அமைச்சரவை மாற்றம் குறித்த செய்திகள் வெளியாகும்’ என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் முதல்வர் சித்தராமையா தனது ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு அளிக்க விரும்பும் நிலையில், துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் முதலில் தலைமை மாற்றத்தை இறுதி செய்ய வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறார்.

இதற்கிடையே 38 புதிய சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களுக்கு 5 அமைச்சர் பதவிகள் வேண்டும் என்று தனித்தனியாக கூட்டம் நடத்தி வலியுறுத்தி வருகின்றனர். ஒருவேளை காங்கிரஸ் மேலிடம் இதற்கு பச்சைக்கொடி காட்டினால், தற்போதைய அமைச்சரவையில் உள்ள 15 முதல் 20 அமைச்சர்கள் மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : Karnataka Congress ,Delhi ,Bengaluru ,Congress government ,Karnataka ,Assembly ,Ashok Pathan ,D.P.… ,
× RELATED கலால் வழக்கில் கெஜ்ரிவாலை தொடர்ந்து...