சென்னை: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு நாளை முதல் 2ம் தேதி வரை 11823 பேருந்துகள் தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நாளை இரவு 9.50 மணி முதல் 1ம் தேதி இரவு 11.07 மணி வரை (வெள்ளிகிழமை) சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு நாளை முதல் 2ம் தேதி வரை சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து நாளை 548 பேருந்துகளும், 1ம் தேதி 565 பேருந்துகளும் மற்றும் 2ம் தேதி 35 பேருந்துகளும் சென்னை மாதவரத்திலிருந்து நாளை 186 பேருந்துகளும் 1ம் தேதி 174 பேருந்துகளும் மற்றும் சென்னை அடையாறிலிருந்து நாளை 55 பேருந்துகளும் 1ம் தேதி 50 பேருந்துகளும் தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும் மற்றும் சென்னை கோயம்பேட்டிலிருந்தும் இயக்கப்படும்.
ஆக, சென்னை மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு நாளை முதல் 2ம் தேதி வரை 11823 பேருந்துகள் தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும். அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 40 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 1ம் தேதி இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், மதுரை, சேலம், கோயம்புத்தூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.
இச்சிறப்பு பேருந்து இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியை பயன்படுத்தி தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம். இவ்வாறு போக்குவரத்துறை மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
