ரயில்வேயில் பணியாளர்களை குறைக்கும் நடவடிக்கை தென் மாநில மக்களுக்கு நேரடி பாதிப்பை ஏற்படுத்தும்: தலைவர்கள் கடும் கண்டனம்

சென்னை: ரயில்வேயில் பணியாளர்களை குறைக்கும் நடவடிக்கைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

* தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்ட அறிக்கை:
இந்திய ரயில்வேயில் சுமார் 29, 608 பணியிடங்களை குறைக்கும் ஒன்றிய பாஜ அரசின் அராஜக போக்கை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். மொத்தம்14.8 லட்சம் பணியாளர்கள் கொண்ட ரயில்வே துறையில் சுமார் 2சதவீதம் பணியிடங்களை, குறிப்பாக ‘நான்- சேவ்ட்டி’ பிரிவில், குறைக்கும் நடவடிக்கை மிகவும் வேதனையானது. குறிப்பாக தெற்கு ரயில்வேயில் மட்டும் 1906 பணியிடங்கள் பாதிக்கப்படுவது, தென் மாநில மக்களுக்கு நேரடி பாதிப்பை ஏற்படுத்தும்.

வந்தே பாரத், அம்ரித் பாரத் போன்ற நவீன ரயில்கள் அறிமுகம் செய்து வரும் சூழலில், பணியாளர்களை குறைப்பது ரயில்வே சேவையின் தரத்தையும், பயணிகளின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கும். இந்த முடிவு ஒன்றிய பாஜ அரசின் தொழிலாளர் விரோதப் போக்கு மற்றும் தென்மாநில பயணிகளுக்கு செய்யும் அநீதியாகவே தெரிகின்றது. ரயில்வே துறையில் தனியார்மயமாக்கல் ஊக்குவிக்கும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. இந்த பணியிடக் குறைப்பு முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். ஏற்கனவே, உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பி, ரயில்வே சேவையை சீராக்க ஒன்றிய பாஜ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

* இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;
இந்திய ரயில்வேயில் மொத்தமுள்ள பணியிடங்கள் 12 லட்சத்து 80 ஆயிரமாகும். இதில் இரண்டு விழுக்காடு பணியாளர்களை ,அதாவது மொத்தப்பணியிடங்களில் 29 ஆயிரத்து 608 பணியாளர்களை, ரயில்வே நிர்வாகம் குறைக்க முடிவு செய்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. இது மக்கள் நலனுக்கு எதிரானது. இத்தொழிலாளர் விரோதப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையால், தெற்கு ரயில்வேயில் மட்டும், ஏறத்தாழ 2000 பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர். இது ரயில் பயணிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும். விபத்துகளைத் தடுக்க உதவாது. இந்தியாவில் தினசரி 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதற்கேற்பப் புதிய பணியிடங்களை உருவாக்கி, நிரந்தர அடிப்படையில் பணியாளர்களை நியமிப்பதற்குப் பதிலாக, ஆட்குறைப்பு மேற்கொள்வது என்பது சரியல்ல.

ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என்று வாக்குறுதி வழங்கிய ஒன்றிய பாஜ அரசு, தற்பொழுது ரயில்வே துறையில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்வதும், வேலை வாய்ப்புகளை ஒழித்துக் கட்டுவதும் அளித்த வாக்குறுதிக்கு நேர் எதிரானதாகும்.

இந்த ஆட் குறைப்பு நடவடிக்கையை உடனடியாக கைவிடுவது மட்டுமல்லாமல், தற்காலிக அடிப்படையில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் அனைத்து ரயில்வே பணியாளர்களுக்கும் பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும். புதிய பணியிடங்களை உருவாக்கி நிரந்தர அடிப்படையில் பணி நியமனம் செய்திட வேண்டும். ரயில்வே துறையைப் படிப்படியாகத் தனியார்மயமாக்கும் முயற்சிகளைக் கைவிட வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஒன்றிய பாஜ அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

* மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா நேற்று வெளியிட்ட அறிக்கை:
இந்திய மக்களின் மிகப்பெரிய போக்குவரத்து அமைப்பாக திகழ்வது ரயில்வே துறை ஆகும். கோடிக்கணக்கான மக்கள் தினந்தோறும் பயணிக்கும் ரயில்வே ஏழை எளிய மக்களின் போக்குவரத்திற்கும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. தென்னக ரயில்வேவில் 95 ஆயிரத்து 322 பணியாளர்கள் பணிபுரிந்து வருவதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது 1,906 பணியிடங்களைக் குறைப்பதற்கான முன்னேற்பாடுகளை தென்னக ரயில்வே செய்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.

அதே போன்று ரயில் பெட்டி தொழிற்சாலை (ஐசிஎப்) நிறுவனத்தில் 217 இடங்கள் குறைக்க இருப்பதாகவும் தெரிய வருகிறது. வந்தே பாரத் அம்ரித் பாரத் என்றெல்லாம் புதிய ரயில்கள் ஒன்றிய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் சூழ்நிலையில் இன்னும் கூடுதலாக பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்கிற நிலையில் ஆட்குறைப்பு செய்வது பொது போக்குவரத்திற்கு மிகப் பெரிய அளவில் இடையூறு செய்வதாகும்.

ஏற்கனவே பணிபுரிந்து கொண்டிருக்கும் பணியாளர்களுக்கு பணிச்சுமையை அதிகரிப்பதோடு ரயில்களின் இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளில் மிகப் பெரிய ெதாய்வு உண்டாகும் நிலையும் உருவாகிறது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்று தேர்தல் நேரத்தில் அறிவித்து விட்டு இருக்கின்ற வேலைகளைக் குறைக்கும் பணிகளை முன்னெடுப்பது ஒன்றிய பாஜ அரசின் உண்மை முகத்தை இந்திய மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தென்னக ரயில்வே ஆட்குறைப்பு வேலைகளைத் தவிர்த்து விட்டுக் கூடுதலாக பணியாளர்களை நியமிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Related Stories: