சென்னை: வருவாய் பகிர்வு அடிப்படையில் நடிகர், நடிகைகள் நடிக்க வலியுறுத்தி, வரும் மே 2ம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்வதாக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்திய பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டது. பதவி ஏற்றுக்கொண்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள், நேற்று காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முதல் பொதுக்குழு கூட்டம் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டனர். அப்போது பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில் முக்கிய தீர்மானமாக, இனிமேல் வருவாய் பகிர்வு அடிப்படையில் மட்டுமே திரைப்படங்களை தயாரிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும், வருவாய் பகிர்வு அடிப்படையில் திரைப்படங்களில் நடிகர், நடிகைகள் நடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதையொட்டி, வரும் மே மாதம் 2ம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டது.
ஓடிடி மற்றும் சாட்டிலைட் வியாபாரம் சரிந்து வரும் சூழ்நிலையில், ஆந்திர மாநிலத்தில் இருப்பது போல், நடிகர்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் வருவாய் பகிர்வு அடிப்படையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு முன்னுரிமை அளித்து நடிக்க வேண்டும். தயாரிப்பாளர்களின் லாப, நஷ்டங்களில் பங்கேற்க வேண்டும்.
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட நடப்பு விநியோகஸ்தர்கள் சங்கம் இணைந்து, தமிழ் திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என்றால், அந்த திரைப்படங்களை 8 வாரங்களுக்கு ஓடிடியில் வெளியிட மாட்டோம் என்று தயாரிப்பாளர்களை நிர்ப்பந்தம் செய்து கடிதம் வாங்கி வருவதை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கண்டிக்கிறோம்.
இதுகுறித்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்பட தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் இணைந்து, வரும் மே 10ம் தேதி கலந்தாய்வு கூட்டம் நடத்துகின்றனர். அதில் 4 மாநில தயாரிப்பாளர்கள் இணைந்து, குறிப்பிட்ட தேதியை தீர்மானித்து, அந்த தேதியில் இருந்து 4 மாநிலங்களிலும் எந்த படத்தையும் வெளியிடுவது இல்லை என்று முடிவெடுக்க இருக்கின்றனர். அதற்கு பொதுக்குழு ஆதரவு தெரிவிக்கிறது.
