×

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முன்னிட்டு மாமல்லபுரத்துக்கு கூடுதல் பஸ்கள்: சுற்றுலா பயணிகள் வலியுறுத்தல்

 

மாமல்லபுரம்: மாமல்லபுரம் சுற்றுலாதலமாக விளங்குகிறது. இதனால் சென்னையின் பல்வேறு பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, ஆலந்தூர், மீனம்பாக்கம், மடிப்பாக்கம், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் வருகை தருகின்றனர். மேலும் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்கள், புராதன சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ஜூனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை, புலிக்குகை போன்றவற்றை சுற்றிப்பார்த்துவிட்டு அதன் முன்பு நின்று செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு மகிழ்கின்றனர்.

இந்நிலையில், கடந்த 17ம்தேதி முதல் மே 31ம்தேதி வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த ஏராள மானோர் குடும்பத்தினருடன் மாமல்லபுரத்தில் குவிய தொடங்கியுள்ளனர். இனிவரும் நாட்களில் பயணிகளின் கூட்டம் தொடர்ந்து அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சென்னை அடையாறில் இருந்து தடம் எண் 588, தாம்பரத்தில் இருந்து தடம் எண் 515 என்ற 2 மாநகர ஏசி பேருந்துகள் மாமல்லபுரத்துக்கு இயக்கப்பட்டு வந்தது. கடந்த ஓராண்டுக்கு முன்பு முன்னறிவிப்புமின்றி திடீரென இரு பேருந்துகளும் நிறுத்தப்பட்டன.

இதனால் கோடை விடுமுறையை கழிக்க வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். எனவே, சுற்றுலா பயணிகளின் நலன் கருதி மாதவரம், பிராட்வே, சென்னை கடற்கரை, அடையாறு, திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து மாமல்லபுரத்துக்கு கூடுதல் மாநகர பஸ்களை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சுற்றுலா பயணிகள், சமூக ஆர்வலகள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Mamallapuram ,Chennai ,Tambaram ,Pallavaram ,Chromepet ,Alandur ,Meenambakkam ,Madipakkam ,Velachery ,Sholinganallur ,Duraipakkam ,Medavakkam ,Mamallapuram.… ,
× RELATED திருத்தணி அருகே குடிநீர்...