×

பைக் மீது கார் மோதல்; சினிமா இயக்குனர் பலி மனைவி, மகன் படுகாயம்: சென்னையை சேர்ந்தவர்கள்

 

களக்காடு: நெல்லை அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் பிரபல சினிமா இயக்குனர் பலியானார். அவரது மனைவி, மகன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். தேர்தலில் வாக்களிப்பதற்காக சென்னையில் இருந்து சொந்த ஊர் வந்தபோது இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள மன்னார்புரத்தைச் சேர்ந்தவர் ஜெயபாலன் (45). இவர் திரைப்பட இயக்குனர். தற்போது பந்து படத்தை இயக்கி வந்தார். சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு ஓட்டு போடுவதற்காக கடந்த 22-ம் தேதி அதிகாலை புறப்பட்டார். பஸ்சில் இடம் கிடைக்கவில்லை. எனவே ஓட்டுப் போட வேண்டும் என்ற நோக்கத்தில் எப்படியாவது சொந்த ஊருக்கு கிளம்ப வேண்டும் என முடிவு செய்து மனைவி பேச்சியம்மாள் (35), 7 வயது சிறுவனுடன் சென்னையில் இருந்து பைக் ஒன்றில் 22-ம் தேதி அதிகாலை புறப்பட்டார்.

மனைவி சொந்த ஊர் ராதாபுரம் அருகே உள்ள கஸ்தூரிரெங்கபுரம். எனவே மனைவியை அங்கு சென்று விட்டுவிட்டு அங்கிருந்து நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி மன்னார்புரம் வர முடிவு செய்து இருந்தார். 23-ம்தேதி அதிகாலை நாங்குநேரி அடுத்து வாகைகுளம் ரோட்டில் வலது புறம் ஓரமாக பைக்கை நிறுத்திவிட்டு நின்று கொண்டு இருந்த வேளையில் எதிரே இருந்து வந்த கார் ஒன்று இவர்கள் மூன்று பேர் மீதும் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் ஜெயபாலன், அவரது மனைவி மற்றும் சிறுவன் உள்ளிட்ட மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.

இதில் ஜெயபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மனைவி பேச்சியம்மாள் மற்றும் 7 வயது சிறுவனும் பலத்த காயமடைந்து நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக நாங்குநேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : VICTIM ,CHENNAI ,Nella ,
× RELATED கொடைக்கானல் சென்றார் முதல்வர்;...