×

குவியும் சுற்றுலாப்பயணிகள் – கொடைக்கானலில் 5 கிமீ தொலைவிற்கு ஸ்தம்பித்த போக்குவரத்து…

கொடைக்கானல்: கோடை விடுமுறை மற்றும் வார இறுதியை முன்னிட்டு கொடைக்கானலுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகளால் மலைச்சாலைகளுக்கு சுமார் 5 கிமீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

குறிப்பாக கோடை வெயிலின் தாக்கத்தால் கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், வெப்பத்தை சமாளிக்க கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மாலை முதல் அதிகாலை வரை நிலவும் இதமான பருவநிலையை அனுபவிக்க மக்கள் கூட்டம் கூட்டமாக கொடைக்கானலை நோக்கி வருகின்றனர்.

தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மக்கள் “மலைகளின் இளவரசி” என அழைக்கப்படும் மலைவாஸ்தலமான கொடைக்கானலுக்கு வருகை தருகின்றனர். இதனால் ஏரிச்சாலை, மூஞ்சிக்கல், கல்லறைமேடு உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக வத்தலகுண்டு பிரதான மலைச்சாலை, வெள்ளி நீர்வீழ்ச்சி, குணா குகை மற்றும் பில்லர் ராக் போன்ற முக்கிய சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. சாதாரண நாட்களில் பூம்பாறையில் இருந்து கொடைக்கானல் வர 45 நிமிடங்கள் ஆகும் பயணம், தற்போது வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் 2 மணி நேரத்திற்கும் மேலாகிறது.

மேலும் வெளியூர்களில் இருந்து வருவோர் தங்கள் வாகனங்களை சாலையோரம் நிறுத்துவதனாலும் அவ்வப்போது போக்குவத்து நெரிசல் அதிகமாக காரணமாக உள்ளது. எனவே கூடுதல் காவலர்களை பணியமர்த்தவும், சுற்றுலா பயணிகள் விதிமுறைகளை கடைபிடிக்க வைக்க நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Kodaikanal… ,Kodaikanal ,
× RELATED பச்சை முட்டையிலிருந்து...