பெரம்பலூர், ஏப். 23: பெரம்பலூர் மாவட்டத்திற்கான வாக்கு எண்ணும் மையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து திருச்சி சரக டிஐஜி சிபி சக்ரவர்த்தி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக, பெரம்பலூர் நகருக்கான புறவழிச் சாலையில் கோனேரி பாளையம் பிரிவு ரோடு அருகே, இயங்கி வரும் ஆதவ் பப்ளிக் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரம்பலூர் (தனி) மற்றும் குன்னம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை திருச்சி சரக டிஐஜி சிபி சக்ரவர்த்தி மற்றும் பெரம்பலூர் மாவட்ட எஸ்பி பிரபாகர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள், கண்காணிப்பு கேமராக்கள், நுழைவு-வெளியேற்ற கட்டுப்பாடுகள், வாக்கு பெட்டிகள் பாதுகாப்பு, மற்றும் பணியாளர்களுக்கான வசதிகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் சரிவாக செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் போது, பெரம்பலூர் மாவட்ட ஏடிஎஸ்பி (தலைமையிடம் பொறுப்பு) பாலமுருகன், பெரம்பலூர் மாவட்ட (சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு) டிஎஸ்பி மயில்சாமி, பெரம்பலூர் (உட்கோட்டம்) டிஎஸ்பி ரவிச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
