×

வல்லநாடு சிவன் கோயில் அருகே கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு

*பக்தர்கள், பொதுமக்கள் அவதி

செய்துங்கநல்லூர் : வல்லநாடு சிவன் கோயில் அருகே கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நிற்பதால் பக்தர்கள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். வல்லநாட்டில் பழமைவாய்ந்த சிவன் கோயில் உள்ளது. இக்கோயிலின் தென்கிழக்கு சுற்றுச்சுவர் அருகே கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல நாட்களாக தண்ணீர் வீணாகி வருகிறது.

அருப்புக்கோட்டை, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், புதூர் மற்றும் கருங்குளம் ஒன்றிய கிராமங்களுக்கு குடிநீர் செல்லும் கூட்டுக்குடிநீர் குழாய்கள், கோயிலின் சுற்றுச்சுவர் அருகே பதிக்கப்பட்டுள்ளது. இந்த குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருவதுடன், கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் குடிநீர் தேங்கியுள்ள பகுதியில் கால் வைத்தால் ஒரு அடி ஆழத்திற்கு கால் பதியும் அளவிற்கு சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

வரும் 29ம் தேதி இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், இதற்கான முன்னேற்பாடு பணிகளும் நடந்து வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே மாவட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கூட்டுக்குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்ய வேண்டுமென ஊர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Vallanadu Sivan Temple ,Sivan temple ,Vallanada ,Ecoil ,
× RELATED தேர்தல் நாளன்று முதியோர்,...