*மக்கள் மகிழ்ச்சி
லாலாப்பேட்டை : லாலாபேட்டை அருகே பிள்ளபாளையத்தில் ரூ. 2.25 கோடியில் புதிய அகலமான பாலங்கள் கட்டப்பட்டுள்ளது.கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகே கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளபாளையத்தில் லாலாபேட்டையில் இருந்து வேங்காம்பட்டி வரை செல்லும் சாலையில் கட்டளைமேட்டு வாய்க்கால்களின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 2 பாலங்கள் கட்டப்பட்டன.
12 அடி அகலமான இந்த பாலங்களின் வழியாக ஒரு சமயத்தில் ஒரு பெரிய வாகனம் மட்டுமே செல்ல முடியும். லாலாபேட்டை அருகே உள்ள கொம்பாடிப்பட்டி, வல்லம் பகுதியைச் சேர்ந்த மக்கள் விவசாயிகள் பலரும் வாகனங்களில் சென்றுவந்தனர். இந்தப் பாலங்களின் தடுப்புச் சுவர்கள் சேதமடைந்தது.
இந்நிலையில் அவ்வழியாக இரு சக்கர வாகனங்கள் மற்றும் பெரிய வாகனங்களில் செல்பவர்கள் அச்சத்துடன் செல்லும் சூழ்நிலை இருந்தது. மேலும் இந்த பாலங்களை அகலப்படுத்தி புதிதாக அமைத்து தர வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தனர்.
2021ம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்ததும் உங்கள் தொகுதியில் முக்கிய பத்து கோரிக்கைகள் என்ற திட்டத்தின் கீழ் குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம், பிள்ளபாளையத்தில் உள்ள கட்டளை மேட்டு வாய்க்கால், புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் குறுக்கே உள்ள 2 பாலங்களையும் அகலப்படுத்தி தர வேண்டும் என்று அளித்த கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு திராவிட மாடல் அரசு நபார்டு வங்கி திட்டத்தின் மூலம் ரூ. 2.25 கோடி மதிப்பில் 2 பாலங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கடந்த 2 வருடத்திற்கு முன்பு பாலம் கட்டும் பணிகள் துவங்கப்பட்டது. பாலம் கட்டுமான பணிகள் நிறைவடைந்ததை அடுத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.
தங்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக நிறைவேற்றி தந்த தமிழ்நாடு திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், குளித்தலை எம்எல்ஏ மாணிக்கத்திற்கும் அப்பகுதி பொதுமக்கள் தங்களது நன்றியை தெரிவித்தனர்.
