*அதிர்ஷ்டவசமாக தப்பிய சுற்றுலா பயணிகள்
கூடலூர் : கூடலூர் ஊட்டி சாலையில் சுற்றுலா பயணிகள் வந்த கார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காரில் இருந்த 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பெங்களூரை சேர்ந்த நண்பர்கள் பிரகாஷ் (33), சேகர் (37), இருவரும் நேற்று முன்தினம் காரில் ஊட்டிக்கு சுற்றுலா வந்துள்ளனர். ஊட்டியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் பார்த்து விட்டு இருவரும் நேற்று மதியம் ஊட்டியில் இருந்து கூடலூர் வழியாக சென்றனர்.
அப்போது, கார் டி.ஆர் பஜார் பகுதியை கடந்து நடுவட்டம் நோக்கி வந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் கார் பள்ளத்தில் கவிழ்ந்ததை பார்த்து வாகனங்ககை ஆங்காங்கே நிறுத்தி விட்டு காருக்குள் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதுகுறித்து நடுவட்டம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் பொதுமக்கள் உதவியுடன் காருக்குள் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக நடுவட்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவருக்கும் லேசான காயங்கள் இருந்ததால் முதலுதவி சிகிச்சை அளித்து பெங்களூருக்கு அனுப்பி வைத்தனர். 30 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
