*விற்பனைக்கு குவிப்பு
போச்சம்பள்ளி : போச்சம்பள்ளியில் குழாய் பொருத்திய மண் பானை விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள பெரும்பாலன கிராம மக்களின் வாழ்வியலுடன் கலந்ததாக மண் பாண்ட பொருட்களின் பயன்பாடு இருந்து வருகிறது. குறிப்பாக இயற்கையான குளிர்ச்சியை தரும் மண் பானை குடிநீர் பழக்கம் இன்று வரையிலும் தொடர்ந்து வருகிறது.
நகரப்பகுதியில் நாகரிக மாற்றத்தால், பாரம்பரியத்தை மறந்து வீடுகளில் பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் கோடை காலங்களில் குளிர்சாதன பெட்டிகளில் வைக்கப்படும் பாட்டில் குடிநீர் பருகும் பழக்கம் இருந்து வருகிறது.
இந்நிலையில், அண்மை காலமாக பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் நோய்கள் பட்டியல் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக கோடை காலங்களில் மண் பானையின் பயன்பாடு கடந்த நில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பகுதியில் வரலாறு காணாத அளவிற்கு கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால், மக்கள் இளநீர், நுங்கு, கரும்புச்சாறு, தர்பூசணி உள்ளிட்ட குளிர்ச்சியான பொருளை தேடி செல்கின்றனர்.
அதேபோல், வீடுகள் மற்றும் அலுவலங்களில் குடிநீர் பயன்பாட்டுக்கு மண் பானைகள் உபயோகிப்பது அதிகரித்துள்ளது. மண்பாண்ட தொழிலாளர்களும் நவீன காலத்துக்கு ஏற்ப குழாய் பொருத்திய மண் பானைகளை போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் விற்பனை செய்து வருகிறார்கள். அவற்று பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்வதாக மண் பாண்ட தொழிலாளர் பூங்கொடி வேணுகோபால் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், `கடந்த காலங்களில் பொதுமக்கள் மத்தியில் மண் பானைக்கு போதிய வரவேற்பு இல்லாததால் ஆண்டுதோறும் பொங்கல் பண்டியின்போது மட்டும் தான் தேடும் நிலை இருந்தது.
தற்போது, மண் பானை தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டு வரவேற்பு அதிகரித்துள்ளது. இதனால், கடந்த சில மாதங்களாக மண் பானைகள் விற்பனை அதிகரித்துள்ளது குறிப்பாக தண்ணீர் பிடிக்க ஏதுவாக குழாய் பொருத்திய மண் பானைகளை மக்கள் ஆர்டர் கொடுத்து வாங்கிச் செல்கிறார்கள்,’ என்றார்.
