*விலை சரிவால் அதிர்ச்சி
போச்சம்பள்ளி : தேர்தல் பறக்கும்படை கெடுபிடி எதிரொலியாக போச்சம்பள்ளி சந்தையில் புளி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. கிலோ 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட புளி 70 ரூபாய் வரை சரிந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி, அரசம்பட்டி, சந்தூர், வேலம்பட்டி, பாரூர், மத்தூர், தாதம்பட்டி, ஒலப்பட்டி, செல்லம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நெடுஞ்சாலை மற்றும் மேட்டு நிலங்களில் ஆயிரக்கணக்கான புளிய மரங்கள் உள்ளன. மண் வளம் புளி சாகுபடிக்கு கை கொடுத்து வருகிறது.
இப்பகுதியில் விளையும் புளி அதிக சதைப்பற்றுடன் சுவையாக இருப்பதால், சந்தைகளில் நல்ல வரவேற்பு உள்ளது. இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் புளியை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, ஆந்திரா, பாண்டிசேரி மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள் நேரடியாக வந்து கொள்முதல் செய்கிறார்கள். கடந்தாண்டு புளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டு உற்பத்தி அதிகரித்துள்ளது.
போச்சம்பள்ளியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை கூடும் சந்தையில் புளி டன் கணக்கில் குவிக்கப்படும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல், பறக்கும் படை கெடுபிடி காரணமாக, சந்தையில் புளி வர்த்தகம் படிப்படியாக குறைந்துள்ளது.
இதுகுறித்து புளி மொத்த வியாபாரியான வெங்கட்டராமன் கூறுகையில், ‘தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், உரிய ஆவணங்கள் இல்லாமல் ரொக்கமாக ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படுகிறது.
இதனால், சந்தைக்கு புளி வாங்க வரும் வெளி மாவட்ட வியாபாரிகள் வருகை குறைந்து விலை சரிந்துள்ளது. கடந்த மாதம் பூ புளி கிலோ ரூ.140 வரை விற்பனையானது. வரத்து குறைந்த நிலையில், நேற்று கூடிய போச்சம்பள்ளி சந்தையில் பூ புளி கிலோ ரூ.70க்கு விற்பனையானது.
கொட்டை புளி கிலோ ரூ.40 முதல் ரூ.45 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் புளி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும், சந்தைக்கு புளி வரத்து குறைந்தது. சுமார் 20 டன் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. தேர்தலுக்கு பின்னர் தான், போச்சம்பள்ளி சந்தையில் புளி வர்த்தகம் சீரடையும்,’ என்றார்.
