சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க கடற்கரையில் மணல்சிற்பம் வரைந்து பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு

*மரக்கன்றுகள் நடப்பட்டது

நாகப்பட்டினம் : இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் சட்டசபை தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி நாகை காமேஸ்வரம், மயிலாடுதுறை தரங்கம்பாடி கடற்கரையில் மணல் சிற்பங்கள் வரைந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின் பேரில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய 3 சட்டசபை தொகுதிகளில் தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது.

சட்டசபை தேர்தலை முன்னிட்டு 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் பல்வேறு துறைகள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக வேளாங்கண்ணி அருகே விழுந்தமாவடி கடற்கரையிலிருந்து காமேஸ்வரம் கடற்கரை வரை தலைஞாயிறு மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் நாட்டு நலப்பணி மாணவ, மாணவிகள் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்.

காமேஸ்வரம் கடற்கரையில் மாணவ, மாணவிகள் மணற்சிற்பங்கள் வரைந்து வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். திட்டச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் சஞ்சய், களிமண் சிற்பம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் காமேஸ்வரம் கடற்கரை பூங்கா பகுதிகளில் மாணவர்களால் மரங்கள் நடப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்ட வருவாய் அலுவலர் பவணந்தி, திட்ட இயக்குநர் ஸ்ருதி ஆகியோர் தலைமையில் மாணவ, மாணவிகள் 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பாக விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.தரங்கம்பாடி:

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பொத்தேர்தல் வருகிற 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 100 சதவிகித வாக்களிப்பை உறுதிபடுத்த இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் சட்டமன்ற தேர்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சுற்றுலா மையமான தரங்கம்பாடிக்கு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகை தந்தனர்.

இதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் தரங்கம்பாடி கடற்கரையில் மணல் சிற்பம் செய்து, அதில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்று எழுதி பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த மணல் சிற்பத்தை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

Related Stories: