திருப்புவனம் : கீழடி 11ம் கட்ட அகழாய்வில் புதிய வடிவிலான பானை கண்டறியப்பட்டது.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 10ம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவடைந்தன. இதில் சுமார் 13 ஆயிரம் தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.
கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்கள் கீழடி அருங்காட்சியகத்திலும் கண்டறியப்பட்ட சுடுமண், செங்கல் கட்டுமானங்கள் திறந்தவெளி அருங்காட்சியகமாக அமைக்கப்பட்டுள்ளன.
11ம் கட்ட அகழாய்வு கடந்த மார்ச் 18ம் தேதி துவங்கியது. இதுவரை நான்கு அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு நடந்து வருகின்றது. நேற்று முன்தினம் நான்காவது குழியில் புதிய வடிவிலான மண் பானை கண்டறியப்பட்டுள்ளது.
கீழடியில் இதுவரை மண்கலம், கெண்டி மூக்கு மண்கலம், மூடியுடன் கொண்ட மண்கலம் என அடுத்தடுத்து கிடைத்தன. குறுகிய வாய்கொண்ட புதிய வடிவிலான மண் பானை நேற்று கண்டெடுக்கப்பட்டது. தொடர் அகழாய்வில் இதுபோன்ற பழங்கால தொல்பொருட்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாக தொல்லியல் துறை தரப்பில் கூறப்படுகின்றது.
