ஏற்கனவே ரூ.1.15 கோடி சிக்கிய நிலையில் நெல்லையில் ரூ.2 கோடி தங்கம், ரொக்கம் பறிமுதல்

நெல்லை: வாக்காளர்களுக்கு வழங்க பணம் பதுக்கப்பட்டுள்ளதாக வந்து ரகசிய தகவலின்பேரில் நெல்லை மற்றும் நாங்குநேரி பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொழிலதிபர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். நெல்லையில் பிரபலமான அல்வா கடையை நடத்தி வரும் சிவசுப்பிரமணியன் வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.40 லட்சம் ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதே போல நெல்லையை அடுத்த ரெட்டியார்பட்டியில் பேக்கரி நடத்தி வரும் நடராஜன் என்பவரது மனைவி லட்சுமி நடராஜன் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இவர் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உறவினர் ஆவார்.

நாங்குநேரியில் உள்ள அவருக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் ரூ.75 லட்சம் ரொக்கத்தை வருமான வரி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் தொடர்ச்சியாக நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ஒரு வீட்டில் வருமான வரி அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை செய்தனர். அங்கு கட்டுக்கட்டாக பணம் மற்றும் நகைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர். இதில் ரூ.25 லட்சம் ரொக்கம் மற்றும் 1,250 கிராம் எடையுள்ள தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த நகைகளின் மதிப்பு ரூ.1 கோடியே 78 லட்சம் ஆகும். ஒட்டுமொத்தமாக அந்த ஒரு வீட்டில் மட்டும் ரூ.2 கோடியே 3 லட்சம் மதிப்பில் நகை மற்றும் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Related Stories: