போச்சம்பள்ளி அருகே கோயிலுக்குள் புகுந்து அம்மன் நகை திருட்டு

போச்சம்பள்ளி, பிப்.23: போச்சம்பள்ளி அருகே கோயிலுக்குள் புகுந்து அம்மன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே குள்ளனூர் பகுதியில் செல்லியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 3 வருடம் அல்லது 5 வருடத்திற்கு ஒரு முறை திருவிழா நடப்பது வழக்கம். மேலும், வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெறும். இந்நிலையில், நேற்று காலை கோயிலுக்கு வழக்கம்போல் பக்தர்கள் சென்றனர். அப்போது, பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டனர். உடனே, உள்ளே சென்று பார்த்தபோது அம்மனின் முகம் துணியால் மூடப்பட்டிருந்தது. மேலும், கழுத்தில் இருந்த கால்பவுன் தாலி மாயமாகியிருப்பதை கண்டு பக்தர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். இதுகுறித்து கோயில் பூசாரி ராமமூர்த்தி போச்சம்பள்ளி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதன்பேரில், போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது, நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கோயிலுக்குள் புகுந்து, அம்மன் முகத்தை துணியில் கட்டிவிட்டு நூதன திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: