ஆந்திர மாநிலம் கர்னூலில் காரும் ரெடிமிக்ஸ் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 8 பேர் உயிரிழப்பு: 10 பேர் காயம்

அமராவதி: ஆந்திர மாநிலம் கர்னூலில் காரும் ரெடிமிக்ஸ் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், காயமடைந்த 10 பேர் மீட்கப்பட்டு எம்மிகனூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பெண்கள், 2 ஆண்கள், சிறுமி ஒருவர் என 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து குறித்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் பலியானவர்களின் உடல்களை மீட்டு, உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், பிரதமர் நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: