பார்சிலோனா: பார்சிலோனா ஓபன் ஆடவர் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் நேற்று, ஆஸ்திரேலிய முன்னணி வீரர் அலெக்ஸ் டிமினார், செர்பிய இளம் வீரர் ஹமத் மெத்ஜெடோவிக்கிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார். ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ரவுண்ட் ஆப் 16 சுற்றுப் போட்டியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னணி வீரர் அலெக்ஸ் டிமினார், செர்பிய வீரர் ஹமத் மெத்ஜெடோவிக் உடன் மோதினார்.
போட்டியின் துவக்கம் முதல் அட்டகாச ஆட்டத்திறனை வெளிப்படுத்திய ஹமத், முதல் செட்டை 6-3 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் கைப்பற்றினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும் சிறப்பாக ஆடிய அவர் அந்த செட்டையும், 6-4 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார். அதனால், 2-0 என்ற நேர் செட்களில் வென்ற அவர் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
