×

செங்கல்பட்டு அருகே ராக்கெட் லாஞ்சர் வெடித்து மாணவன் உயிரிழந்தது எப்படி? பரபரப்பு தகவல்கள்

சென்னை: செங்கல்பட்டு அருகே கூகுள் மேப் மூலமாக தடையை மீறி அனுமந்தபுரம் மலை மீது டிரெக்கிங் சென்று திரும்பும்போது, கல்லூரி மாணவனின் கால்பட்டு ராக்கெட் லாஞ்சர் வெடித்தில் பலியானார். மேலும், படுகாயம் அடைந்த நான்கு மாணவர்கள் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். செங்கல்பட்டு அடுத்த அனுமந்தபுரம் கிராமத்தில் ராணுவ துப்பாக்கிச்சூடு பயிற்சி மையம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

இந்த பயிற்சி தளத்தில் மத்திய, மாநில போலீசார் மற்றும் ராணுவ அதிகாரிகள், துணை ராணுவத்தினர், தேசிய பாதுகாப்பு படையினர் உள்பட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த பாதுகாப்பு வீரர்கள் அடிக்கடி துப்பாக்கி சுடுதல், ராக்கெட் லாஞ்சர் பயிற்சி மற்றும் வெடிகுண்டு வீசும் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு வெடிக்காத ராக்கெட் லாஞ்சர்களை இங்கேயே அப்படியே விட்டு விட்டு சென்றுள்ளது வழக்கமாக இருந்துள்ளது.

இந்த ராணுவ துப்பாக்கி சூடு பயிற்சி பெறும்போது ஒரு சில ராக்கெட் லாஞ்சர்கள் குடியிருப்பு பகுதியில் விழுந்து வீடு சேதமடைந்துள்ளன. மேலும், அஞ்சூர் புதிய கிராமத்தில் ஒரு வீட்டின் மீது விழுந்துள்ளது. அந்த ராக்கெட் லாஞ்சரை அனுமந்தபுரம் மலையில் புதைத்துள்ளனர். அனுமந்தபுரத்தில் துப்பாக்கி சூடு பயிற்சி ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறை நடைபெறுவது வழக்கம். மேலும் வழக்கமாக துப்பாக்கி சூடு பயிற்சி முடிந்ததும் அதன் தோட்டாக்களை அப்போது எடுத்து செல்வார்கள்.

ஆனால் ஒரு சில தோட்டாக்களை விட்டு செல்வதால் இரும்பு தோட்டாக்கள், மினி ராக்கெட் லாஞ்சர்களை எடுத்து சென்று இரும்பு கடையில் கொடுத்து பணம் வாங்கி செல்வது வழக்கமாக இருந்துள்ளது. ஆடு, மாடுகளை மேய்ப்பவர்களில் சிலரின் கண்களில் ராக்கெட் லாஞ்சர் தென்படும். அப்போது எதிர்பாராத விதமாக வெடித்து பலர் காயமடைந்து சிலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் நான்காம் ஆண்டு படித்து வரும் 6 மாணவர்கள் கூகுள் மேப் மூலமாக டிரெக்கிங் செய்ய இடம் தேடி உள்ளனர்.

அப்போது அனுமந்தபுரத்திலுள்ள ராணுவ துப்பாக்கி சூடு பயிற்சி மையம் அருகே உள்ள மலையை பார்த்து உள்ளனர். அதன்படி, நேற்றுமுன்தினம் மாலை சுமார் 5.30 மணி அளவில் பெங்களூருவை சார்ந்த யமான்சூ யாதவ் (21), ஐதராபாத்தை சேர்ந்த விஷால் (21), உத்தரபிரதேசத்தை சார்ந்த ஆரியன் சர்மா (21), ஜம்மு காஷ்மீரை சேர்ந்த கிருஷ்ணா (21), டெல்லியைச் சேர்ந்த நிஷ்காஷ் (21) மற்றும் மீரட்டை சேர்ந்த விராட் (23) ஆகியோர் மலை மீது ஏறி உள்ளனர்.

இதனை தொடர்ந்து மலையில் இருந்து கீழே இறங்கும்போது ராணுவத்தினரால் அங்கு விட்டு செல்லப்பட்ட ராக்கெட் லாஞ்சர் மீது யமான்சூ யாதவ் கால் பட்டுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக ராக்கெட் லாஞ்சர் வெடித்ததில் யமான்சூ யாதவ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்ததும் யமான்சூவுடன் வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் உடன் நடந்து வந்த விஷால், ஆரியன் சர்மா, கிருஷ்ணா மற்றும் நிஷ்காஷ் ஆகியோரும் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்தில் காயம் அடையாத விராட் உடனே 108 ஆம்புலன்ஸ் மற்றும் மறைமலை நகர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த படுகாயமடைந்த நான்கு பேரையும் உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை செங்கல்பட்டு கலெக்டர் மாலதி ஹெலன் சந்தித்து அவர்கள் பெற்று வரும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். மேலும் சம்பவ இடத்தில் காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் தலைமையில் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அனுமந்தபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* அனுமந்தபுரம் மலை ஏற அனுமதிக்க கூடாது
ஏற்கனவே இந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதி என அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மிறி மக்கள் ஆடு, மாடுகளை மேய்க்க செல்வதாலும், அனுமந்தபுரம் மலை ஏற செல்வதாலும் விபத்தில் சிக்குகின்றனர். எனவே, மலை ஏற அனுமதிக்க கூடாது. மேலும், நிரந்தமாக காவலர்களை நியமித்து பொதுமக்கள் செல்வதை முற்றிலும் தடுத்து நிறுத்தினால் மட்டுமே இதுபோன்ற விபத்துகளை தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Tags : Chengalpattu ,Chennai ,Anumandapuram Mountain ,
× RELATED பகுதி நேர அடிப்படையில் பணியாற்றிய...