×

பிரமாண்டமாக தயாராகும் சுற்றுச்சூழல் பூங்கா சைதாப்பேட்டை, கிண்டி, வேளச்சேரி, ஆலந்தூருக்கு வெள்ள அபாயம் வராது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை கிண்டியில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவில் நேற்று அளித்த பேட்டி: சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானம், சுமார் 160.86 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டது. சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தே இங்கு குதிரைப் பந்தயம் நடைபெற்று வருகிறது. இந்த குதிரைப் பந்தயத்தினால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுபவர்கள் ஏழை எளிய மக்கள் மட்டுமே. சைதாப்பேட்டையில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக வசித்து வரும் எங்களுக்கு, இதில் பாதிப்புக்குள்ளானவர்களை நேரடியாகப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏராளமானோர் குதிரைப் பந்தயத்தில் கலந்து கொண்டு, தங்களின் ஒட்டுமொத்த வருமானத்தையும் இழந்து உயிரிழந்ததுடன், பலர் மனநோயாளிகளாக அலைந்து கொண்டிருப்பதை நாம் இன்றும் காண்கிறோம். அந்த வகையில், கிண்டி மைதானம் பலரது வாழ்வைப் பலிகொண்ட இடமாக இருந்து வந்துள்ளது.

கலைஞர், கடந்த 1974ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி, கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இனிமேல் குதிரைப் பந்தயம் நடக்காது என்ற சட்டத்தைக் கொண்டு வந்தார். குதிரைப் பந்தயம் தடைவிதிக்கப்பட்டதன் நினைவாகத்தான், இன்றும் அண்ணா மேம்பாலம் அருகே ஒரு குதிரைச் சிலை நிறுவப்பட்டுள்ளது. இருப்பினும், இது சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் நீதிமன்றங்களுக்குச் சென்று வழக்காடி, இந்த குதிரை பந்தயத்தை மீண்டும் தொடர்ந்து நடத்தி வந்தனர். 200 ஆண்டுகாலப் பழமையான இந்த பந்தயத்திற்கு தீர்வு காண கலைஞர் விரும்பிய நிலையில், தற்போது அவருடைய மகனாக, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த கனவை நனவாக்கி வருகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் ஊட்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தை அரசு கையகப்படுத்தி, அங்கே தற்போது சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதேபோல், சென்னையின் பிரதான மையப்பகுதியான கிண்டியில் அமைந்துள்ள இந்த 160.86 ஏக்கர் நிலத்திற்கு, நிர்வாகத்தினர் சுமார் 700 கோடி ரூபாய் வரை குத்தகை பாக்கி வைத்திருந்தனர். இந்த பணத்தையும் செலுத்தாமல் பந்தயத்திற்காக அந்த நிலத்தைப் பயன்படுத்தி வந்த நிலையில், அதனை மீட்டு ஆக்கப்பூர்வமான பணிகளுக்குப் பயன்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்தார். பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, தற்போது இந்த நிலம் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இதில் 118 ஏக்கர் நிலப்பரப்பில் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு, முதற்கட்டமாக 25 ஏக்கர் நிலத்தில் 38 கோடி ரூபாய் செலவில் பசுமைப் பரப்பை அதிகரித்தல், மரங்களை நடுதல் மற்றும் நீர்நிலைகளை உருவாக்குதல் போன்ற பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த இடத்தை அரசு கையகப்படுத்திய உடனே, அங்கிருந்து வெளியேறும் உபரி மழைநீரால் சுற்றுப்புற குடியிருப்பு மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை உணர்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், சுமார் 28 கோடி லிட்டர் தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் ஆறு குளங்களை வெட்ட ஆணையிட்டார். முற்காலத்தில் மன்னர்கள் குளம் வெட்டிய வரலாற்றைப் போல, இன்று சென்னையின் மையப்பகுதியில் இத்தனை பெரிய நீர்நிலைகளை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். அதுமட்டுமின்றி, இந்த குளங்களிலிருந்து உபரி நீர் வெளியேறுவதற்காக மைதானத்தைச் சுற்றி ரூ.52 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால்வாய்கள் கட்டும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் எதிர்காலத்தில் எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் மடுவின்கரை, கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, ஆலந்தூர் போன்ற பகுதி மக்களுக்கு வெள்ள அபாயம் இருக்காது என்பதோடு, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வறட்சிக் காலங்களிலும் குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்படாத சூழல் உருவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Saidapet ,Guindy, Velachery and Alandur ,Minister ,M. Subramanian ,Chennai ,Tamil Nadu ,Medical ,Welfare ,Guindy, Chennai ,Guindy Race Course ,Chennai Saidapet ,
× RELATED காலனி கோயிலுக்குள் வர மாட்டீங்களா…?...