×

கின்னஸ் சாதனை படைத்த பாடகி ஆஷா போஸ்லே மாரடைப்பால் காலமானார்

சென்னை: இந்திய திரையுலகில் தமிழ் உள்பட 20 மொழிகளில் 12,500 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கும் சீனியர் பாடகி ஆஷா போஸ்லே, நேற்று மும்பை மருத்துவமனையில் தனது 92வது வயதில் காலமானார். கடந்த சில மாதங்களாக நுரையீரல் பாதிப்பு, இதயம் தொடர்பான பிரச்னைகளால் ஆஷா போஸ்லே கடுமையாக போராடி வந்தார். நேற்று முன்தினம் அவருக்கு திடீரென்று ஏற்பட்ட மூச்சுத்திணறல் மற்றும் மாரடைப்பு காரணமாக, மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று ஆஷா போஸ்லே மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை 4 மணியளவில், மும்பை சிவாஜி பூங்காவில் நடக்கிறது என்று, ஆஷா போஸ்லே மகன் ஆனந்த் போஸ்லே தெரிவித்துள்ளார்.

கடந்த 1933 செப்டம்பர் 8ம் தேதி மகாராஷ்டிராவிலுள்ள சாங்லியில், பிரபல பாடகர் தீனநாத் மங்கேஷ்கரின் மகளாக பிறந்தார் ஆஷா போஸ்லே. தனது 9 வயதில் தந்தையை இழந்த அவர், பிறகு தனது சகோதரியும், மறைந்த முன்னணி பாடகியுமான லதா மங்கேஷ்கருடன் இணைந்து பாட தொடங்கினார். 1943ல் ‘மஜா பால்’ என்ற மராத்தி படத்தில், `சலா சலா நவ் பாலா’ என்ற தனது முதல் பாடலை பாடிய அவர், தொடர்ந்து ஹன்ஸ்ராஜ் பாஹ்ல், ஓ.பி.நய்யார், மதன் மோகன், ஆர்.டி.பர்மன், இளையராஜா, அனுமாலிக், ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, வித்யாசாகர் உள்பட பல்வேறு முன்னணி இசை அமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

தமிழ், இந்தி, மராத்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, ஒரியா, போஜ்புரி உள்பட பல்வேறு மொழிகளில் உருவான படங்களில் 12,500 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். 1949ல் தனது தனி செயலாளர் கணபத் ராவ் போஸ்லே என்பவரை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு ஹேமந்த் போஸ்லே, ஆனந்த் போஸ்லே ஆகிய மகன்களும், வர்ஷா போஸ்லே என்ற மகளும் இருக்கின்றனர். 1966ல் கணவர் கணபத் ராவ் போஸ்லேவின் மறைவுக்கு பிறகு பல ஆண்டுகள் தனியாக வாழ்ந்து வந்த ஆஷா போஸ்லே, பாலிவுட் முன்னணி இசை அமைப்பாளர் ஆர்.டி.பர்மன் என்பவரை கடந்த 1980ல் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

கடந்த 1987ல் ராமராஜன் நடித்த ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தில், இளையராஜா இசையில் ‘செண்பகமே செண்பகமே’ என்ற பாடலின் மூலம் ஆஷா போஸ்லே தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பிறகு இளையராஜா இசையில்
‘நான் சொன்னதே சட்டம்’ படத்தில் அனைத்து பாடல்களையும் பாடினார். ‘புதுப்பாட்டு’ படத்தில் ‘எங்க ஊரு காதல பத்தி’ மற்றும் ‘மீரா’ படத்தில் ‘பனி விழும் மாலையில்’, ‘ஓ பட்டர்ஃபிளை’ மற்றும் ‘சேதுபதி ஐபிஎஸ்’ படத்தில் ‘சாத்து நட சாத்து’ மற்றும் ‘ஹே ராம்’ படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து ‘நீ பார்த்த பார்வை’, தவிர தனது கணவர் ஆர்.டி.பர்மன் இசை அமைத்த ‘உலகம் பிறந்தது எனக்காக’ படத்தில் ‘தள்ளி தள்ளி போகும் பொன்னையா’, ‘திருட்டு பூனை இருட்டு வேலை’ மற்றும் ‘தங்கத்தின் தங்கம்’ படத்துக்காக எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் ‘முத்து முத்து’, ‘செவ்வந்தி பூ மாலை கட்டு’, தேவா இசையில் ‘நேருக்கு நேர்’ படத்தில் ‘எங்கெங்கே’, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘இருவர்’ படத்தில் ‘வெண்ணிலா வெண்ணிலா’, ‘அலைபாயுதே’ படத்தில் ‘செப்டம்பர் மாதம்’, ரஜினிகாந்த் நடித்த ‘சந்திரமுகி’ படத்தில் வித்யாசாகர் இசையில் ‘கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்’ ஆகிய பாடல்களை பாடியுள்ளார். தமிழில் ஆஷா போஸ்லே சில பாடல்களே பாடியிருந்தாலும், அவை காலத்தால் அழிக்க முடியாத பாடல்களாக நீடித்து நிலைத்திருக்கிறது.

கடந்த 2011ல், உலகிலேயே அதிக பாடல்களை பாடிய கலைஞர் என்ற கின்னஸ் உலக சாதனையை படைத்த ஆஷா போஸ்லே, 1981ல் `உம்ராவ் ஜான்’ என்ற இந்தி படத்துக்காக தனது முதல் தேசிய விருதையும், 1988ல் `இஜாசத்’ என்ற படத்துக்காக தனது 2வது தேசிய விருதையும் வென்றார். 2000ல் இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதையும், 2008ல் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம விபூஷணையும் பெற்றார். 2022ல் ஜாக்கி ஷெராஃப்பின் `லைஃப் இஸ் குட்’ படத்துக்காக பாடிய `ரூட் பீகே டான்’ என்ற பாடல்தான், ஆஷா போஸ்லே கடைசியாக பாடிய இந்தி பாடல். 2012க்கு பிறகு இந்தி பாடல்களில் ஆபாச வார்த்தைகள் அதிகமாகி விட்டது என்று வருத்தப்பட்ட அவர், திரைப்படங்களில் பாடுவதை குறைத்துக்கொண்டார். 2022க்கு பிறகு பாடக் கூடாது என்ற முடிவில் தீவிரமாக இருந்த அவர், அதை 2024ல் தளர்த்திக்கொண்டு ஒரு பாடலை பாடினார். தனது 91வது வயதில் பாடிய ‘சையான் பினா’ என்ற பாடல், அவரது இசைக்குடும்ப பாரம்பரியத்தை விளக்கியது.

ஆஷா போஸ்லேவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். ஆஷா போஸ்லேவின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணியளவில் முழு அரசு மரியாதையுடன் ஆஷா ேபாஸ்லேயின் இறுதிச்சடங்கு நடக்கிறது.

இந்தியாவின் பணக்கார பாடகி: 1980ல் இசை அமைப்பாளர் ஆர்.டி.பர்மனை திருமணம் செய்துகொண்டு, 1994ல் அவரது மரணம் வரை இணைந்து வாழ்ந்தார் ஆஷா போஸ்லே. அவர்களின் மகன் ஹேமந்த் போஸ்லே, மகள் வர்ஷா போஸ்லே இருவரும் காலமான நிலையில், ஆனந்த் போஸ்லே மட்டும் ஆஷா போஸ்லேயின் தொழில் விவகாரங்களை நிர்வகித்து வருகிறார். 2026ம் ஆண்டு கணக்குப்படி, ஆஷா போஸ்லேவின் நிகர சொத்து மதிப்பு 100 கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்பட்டது. சில அறிக்கைகள் ரூ.200 முதல் ரூ.250 கோடி வரை இருக்கும் என்கின்றன. இதன்மூலம் இந்தியாவின் பணக்கார பாடகிகளில் முதல் 10 இடங்களுக்குள் ஆஷா போஸ்லே பெயர் இருக்கிறது. ‘ஆஷாஸ்’ என்ற உலகளாவிய உணவக சங்கிலியை (ஃபுட் செயின்) துபாய், அபுதாபி, பக்ரைன், குவைத், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் வெற்றிகரமாக நடத்தி வந்தார். மும்பை, புனே ஆகிய பகுதிகளில் அவருக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் இருக்கிறது. ரியல் எஸ்டேட் நிறுவனத்தையும் நடத்தி வந்தார்.

இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், கமல்ஹாசன் இரங்கல்: ஆஷா போஸ்லே மறைவுக்கு இசை அமைப்பாளர் இளையராஜா வீடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், ‘சகோதரி ஆஷா போஸ்லே மறைவு எனக்கு அதிக துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் என்மீது எவ்வளவு அன்பும், பாசமும் வைத்திருந்தாரோ, அதே அளவுக்கு ஒரு பின்னணி பாடகியாக என்னிடத்தில் அதிக மரியாதையும் வைத்திருந்தார் என்பதை என்னால் மறக்க முடியாது. எனது வாழ்நாளில் மறக்க முடியாத இடத்தில் இருப்பவர் அவர். வேறெந்த குரலோடும் ஒப்பிட முடியாத தனித்துவம் வாய்ந்த குரல் மற்றும் திறமை அவரிடத்தில் இருந்தது. அவர் காலமானது எனக்கு அதிக வருத்தத்தை ஏற்படுத்தியது. எப்போது சென்னைக்கு வந்தாலும் என்னை சந்தித்துவிட்டு செல்வார். திரையுலகம் எப்போதும் அவரது குரலை மறக்காது. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ள பதிவில், ‘அவரது குரல் மற்றும் ஆராவின் மூலம் ஆஷா போஸ்லே எப்போதும் நம்முடன் நிலைத்து இருப்பார். எவ்வளவு பெரிய கலைஞர் அவர்’ என்று தெரிவித்துள்ளார். நடிகரும், மநீம கட்சி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில், ‘நிரந்தர பாடகர், விழித்துக்கொள் தோழி’ என்று ஆஷா போஸ்லே பற்றி குறிப்பிட்டுள்ளார்.

Tags : Asha Bhosle ,Chennai ,Mumbai ,
× RELATED காலனி கோயிலுக்குள் வர மாட்டீங்களா…?...