×

எரிசக்தி பாதுகாப்பு குறித்து ஆலோசிக்க கத்தார் செல்லும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி..!

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான நம் இந்தியாவில் ஈரான், இஸ்ரேல், அமெரிக்க போரால் எல்பிஜி விநியோகத்தில் கணிசமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சரான ஹர்தீப் சிங் புரி 2 நாள் பயணமாக கத்தாருக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இது தொடர்பாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் “பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை மத்திய அமைச்சர் திரு. ஹர்தீப் எஸ். பூரி, 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் கத்தார் நாட்டிற்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொள்கிறார்” என்று பதிவிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர்நிறுத்தம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இந்த சுற்றுப்பயணம் நிகழ்கிறது. இதனிடையே மேற்கு ஆசிய மோதல் காரணமாக ஆபத்துக்குள்ளாகியுள்ள இந்தியாவிற்கான எரிசக்தி விநியோகங்களைப் பாதுகாப்பது குறித்து, முக்கிய எரிசக்தித் துறை அதிகாரிகளைச் சந்தித்து ஹர்தீப் சிங் புரி ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கு LNG வழங்கும் முன்னணி நாடுகளில் ஒன்றாக கத்தார் இருந்து வருவதாலும், தற்போதைய மோதல் சூழலுக்கு முன்னதாக இந்தியாவின் மொத்த LNG இறக்குமதியில் 45 சதவீதத்தை கத்தார் பூர்த்தி செய்து வந்ததாலும், ஹர்தீப் சிங்கின் இந்த சுற்றுப்பயணம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

முன்னதாக மார்ச் மாத தொடக்கத்தில், கத்தார் எனர்ஜி நிறுவனத்தின் (QatarEnergy) முக்கிய எரிவாயு நிலையத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தி, அங்கு பேரழிவை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, இந்த பிராந்தியத்திலிருந்து இந்தியாவுக்கு வரும் எரிவாயு விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 2 வார போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, ஹர்தீப் சிங் தனது கத்தார் பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்தப் போர்நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து, உலகின் மிகப்பெரிய LNG ஏற்றுமதி ஆலையில் உற்பத்தியைத் மீண்டும் தொடங்கும் நோக்கில், கத்தார் தனது பொறியாளர்களையும் தொழிலாளர்களையும் திரட்டும் பணிகளைத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் எரிபொருள் இறக்குமதியில் பெரும்பகுதி வளைகுடாப் பகுதியிலிருந்தே வருவதால், கத்தாரின் ‘ராஸ் லஃபான் தொழிற்துறை நகர் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் இந்தியாவின் எரிசக்தி விநியோகத்தைப் பாதிக்க கூடும் என்று எண்ணெய் அமைச்சகம் கடந்த மார்ச் மாதம் தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

Tags : Union Minister ,Hardeep Singh Puri ,Qatar ,India ,Iran ,Israel ,US ,Union Petroleum ,Natural Gas ,Minister ,Hardeep Singh Buri ,
× RELATED ராஜஸ்தானில் மர்ம காய்ச்சல்; 5...