திருமலை : திருமலையில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையொட்டி, திருமலை போக்குவரத்து போலீசார் ஏற்பாட்டில், வாகனப் பாதுகாப்பில் சிறப்புக் கவனத்தில் கொண்டு உள்ளூர் வாகன டிரைவர்களுக்காக விழிப்புணர்வு நிகழ்ச்சி திருமலையில் உள்ள புஷ்பகிரி மடத்தில் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போலீசார் வாகனங்களில் தீ விபத்துகளைத் தடுப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து டிரைவர்களுக்கு விளக்கினர்.
குறிப்பாக, வாகனங்களின் மின் அமைப்பை உரிய நேரத்தில் பரிசோதிப்பது, எரிபொருள் கசிவுகளைப் புறக்கணிக்காமல் உடனடியாகச் சரிசெய்வது, மற்றும் அதிக வெப்பத்தால் தீ விபத்து ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டறிவது ஆகியவை குறித்துத் தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
மேலும், ஒவ்வொரு வாகனத்திலும் தீயணைப்புக் கருவி வைத்திருப்பது கட்டாயமாகும் என்றும், அவசரகாலச் சூழ்நிலைகளில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்தும் நடைமுறை விளக்கம் அளிக்கப்பட்டது. விபத்துகளைக் கணிசமாகக் குறைப்பதற்காக, டிரைவர்கள் தங்கள் வாகனங்களைச் சுத்தமாகவும் முறையாகவும் பராமரிக்குமாறு அறிவுறுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஹரிபிரசாத், மோட்டார் வாகன ஆய்வாளர் சீனிவாசலு, கோட்ட பொறுப்பாளர்கள் சிவக்குமார் ரெட்டி, கிருஷ்ணய்யர், இரண்டாவது நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீராமுடு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
