×

மனதில் இடம் பிடிக்கும் முதல்வர் யார்? ஆட்சியை தீர்மானிக்கும் பெண் வாக்காளர்கள்

சென்னை வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை தீர்மானிக்கும் முக்கிய இடத்தில் பெண் வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் மனதில் இடம் பிடிக்கும் முதல்வர் யார் என்பதை தமிழகம் எதிர்நோக்குகிறது.
தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல், இந்த முறை வழக்கமான அரசியல் போட்டியை விட முற்றிலும் வேறுபட்ட ஒரு சமூக அரசியல் போராட்டமாக மாறியுள்ளது. அதன் மையத்தில் நிற்பது பெண்கள் வாக்காளர்கள். சமீபத்திய தரவுகளின்படி, தமிழ்நாட்டில் பெண் வாக்காளர்கள் 50 சதவீதத்தை தாண்டி, ஆண்களை விட பல லட்சம் அதிகமாக உள்ளனர். இந்த பாலின வித்தியாசம் கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது இரட்டிப்பாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாற்றம் வெறும் எண்ணிக்கையில் மட்டும் இல்லாமல், தேர்தலின் திசையையே மாற்றும் சக்தியாக உருவெடுத்துள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான தொகுதிகளில் பெண்களே அதிக வாக்காளர்களாக உள்ளனர். இதனால் எந்தக் கட்சியும் பெண்களை புறக்கணித்து ஆட்சி அமைப்பது சாத்தியமற்ற ஒன்றாக மாறியுள்ளது.

ஆளும் திமுக அரசு, பெண்களை மையமாகக் கொண்டு பல முக்கிய நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மூலம் மாதாந்திர நிதி உதவி, குடும்பச் செலவுகளை குறைக்கும் பல்வேறு சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள், பெண்களின் பாதுகாப்பு ஆகியவை பெண்களிடையே பெரும் ஆதரவை உருவாக்கியுள்ளன. இந்த திட்டங்கள் மூலம் பெண்கள் மாதாந்திரம் கணிசமான தொகையை சேமிக்க முடிந்துள்ளதாக ஆய்வுகளும் கூறுகின்றன.

இதனிடையே, தேர்தலை முன்னிட்டு திமுக மேலும் புதிய வாக்குறுதிகளையும் அறிவித்துள்ளது. குறிப்பாக பெண்களுக்கு மாதம் ஆயிரத்திலிருந்து ரூ.2000ஆக உயர்த்தி வழங்கும் திட்டம் போன்ற அறிவிப்புகள் பெண்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திமுக ஆட்சி ‘சொன்னதை செய்துள்ள அரசு’ என குடும்ப தலைவிகள் மற்றும் பெண்களிடையே பெரும் ஆதரவையும் பெற்றுள்ளது.

கடந்த கால அரசியல் நிலவரங்களை கருத்தில் கொள்ளும் போது, தமிழகத்தில் பெண் வாக்காளர்கள் எப்போதும் ஆட்சியை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக இருந்து வருகின்றனர். முன்னாள் தலைவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலங்களில் பெண்களுக்கான நலத்திட்டங்கள் அவர்களுக்கு வலுவான ஆதரவை உருவாக்கியிருந்தன. அதேபோல் கலைஞர் காலத்தில் சுயஉதவி குழுக்கள் மூலம் பெண்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக வலுப்படுத்தப்பட்டனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி காலத்தில் வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமை தொகை ரூ.1000 பெண்களின் கைகளில் தவழும் ஒரு தொகையாக உள்ளது. சிறு தேவைகளுக்காக கடன் வாங்கிக் கொண்டிருந்த பெண்களுக்கு இந்த தொகை முத்தாய்பாயாக மாறியுள்ளது. இந்நிலையில், இந்த தேர்தல் என்பது யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது மட்டுமல்ல, ‘பெண்கள் யாரை நம்புகிறார்கள்?’ என்பதே முக்கியமான கேள்வியாக மாறியுள்ளது. குடும்பச் செலவுகள், குழந்தைகள் கல்வி, வேலைவாய்ப்பு, பாதுகாப்பு ஆகியவற்றில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்களே பெண்களின் வாக்கை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக இருக்கும்.

Tags : Chennai ,Tamil Nadu ,
× RELATED காரைக்குடி ராமலிங்கம்...