சென்னை: மொரீசியஸ் நாட்டில் இருந்து ஏர் மொரீசியஸ் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் இரவு 286 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டு இருந்தது. விமானத்தில் மொரீசியஸ் நாட்டைச் சேர்ந்த கிருஷ்ணா (60) என்பவர், ரத்த புற்றுநோய் பாதித்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக, தனது மனைவியுடன் வந்தார்.
விமானம் நேற்று அதிகாலை, நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது, திடீரென கிருஷ்ணாவுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. விமானத்தில் பயணித்த மருத்துவர்கள் கிருஷ்ணாவுக்கு அவசரகால முதலுதவி சிகிச்சை அளித்தனர். பலனில்லை.
இதையடுத்து, காலை 6 மணியளவில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. தயார் நிலையில் இருந்த சென்னை விமான நிலைய மருத்துவ குழுவினர் கிருஷ்ணாவின் உடல்நிலை குறித்து பரிசோதித்தனர். அதில், கிருஷ்ணா மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்பு சென்னையிலிருந்து 1 மணிநேரம் காலதாமதமாக மொரீசியஸ் நாட்டிற்கு விமானம் புறப்பட்டு சென்றது.
