கும்பகோணம் நகராட்சியில் ரூ.130 கோடி முறைகேடு கண்டித்து போராட்டம்

கும்பகோணம், பிப்.19: கும்பகோணம் நகரில் மத்திய அரசின் அம்ருத் திட்டப்பணிகளில் சுமார் ரூ.130 கோடி முறைகேடு நடைபெற்றதை கண்டித்து கும்பகோணம் நகராட்சி அலுவலகம் முன் திமுக சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

கும்பகோணம் திருவிடைமருதூர் சாலையில் உள்ள நகராட்சி அலுவலகம் எதிரே குடந்தை பெருநகர கழக செயலாளர் தமிழழகன் தலைமையில் மயிலாடுதுறை தொகுதி எம்பி ராமலிங்கம், எம்எல்ஏக்கள் கும்பகோணம் அன்பழகன், திருவிடைமருதூர் செழியன் ஆகியோர் முன்னிலையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. முன்னதாக நகராட்சி அலுவலகம் முன்பு 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது போராட்டம் நடத்த ஊர்வலமாக வந்த திமுகவினரை நகராட்சி அலுவலகம் முன் தடுப்புகள் அமைத்து போலீசார் தடுத்து நிறுத்தினர். இருப்பினும் போராட்டக்காரர்கள் தடுப்புகளை தாண்டி நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின்போது கும்பகோணம் நகரில் சுமார் ரூ.130 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசின் அம்ருத் திட்ட பணிகளில் உள்ள முறைகேடுகளை கண்டிப்பது, குடிநீர் பாதாள சாக்கடை இணைப்புகள் முழுமை பெறாமல் சுமார் 26 கோடி மதிப்பீட்டில் சாலை பணிகள் துவங்கியுள்ளததை கண்டிப்பது, சுமார் 8 கோடி மதிப்பீட்டில் புதிய நகராட்சி அலுவலகம் திறப்பு விழா நடத்தி நான்கு மாதங்கள் கடந்தும் அடிப்படை வசதிகள் செய்யாமலேயே அவசரகதியில் புதிய கட்டிடத்திற்கு அலுவலகத்தை மாற்றியதை கண்டிப்பது, புதிய பேருந்து நிலையத்தில் சைக்கிள் ஸ்டாண்ட் ஏலம் நடத்தாமல் வருவாய் இழப்பை ஏற்படுத்திய நகராட்சி நிர்வாகத்தை கண்டிப்பது, வீடு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்காத நிலையில் பாதாள சாக்கடை வரி விதித்துள்ளதை கண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தின் போது கோஷமிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 500க்கும் அதிகமானவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்தனர்.

Related Stories: