கொள்ளிடம் : கொள்ளிடம் பகுதியில் பெய்த மழையினால் உளுந்து மற்றும் பயறு வகை பயிரில் மழை நீர் தேங்கியது.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த பத்து தினங்களாக கடும் வறட்சி நிலவி வருகிறது. இந்நிலையில் கடுமையான வெப்பத்தினால் பகல் பொழுதில் வெளியே செல்வதற்கு பதிலாக அனைவரும் மூன்று மணிக்கு மேல் வெளியே செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கோடை வெப்பம் ஓரளவுக்கு தணியும் வகையில் கொள்ளிடத்தில் சில கிராமப் பகுதிகளில் மட்டும் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணி நேரம் கன மழை பெய்தது. இதனால் வேட்டங்குடி, எடமணல், திருமுல்லைவாசல், கேவரோடை, பழையபாளையம்,ஆலங்காடு, கடவாசல், கூழை யாரு உள்ளிட்ட கிராமங்களில் கன மழை பெய்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு அதிக வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில் திடீரென பெய்த மழையினால் சில பகுதிகளில் வெப்பம் தணிந்து காணப்பட்டது.
உளுந்து பயறு உள்ளி ட்ட பயறு வகை பயிர்கள் சில இடங்களில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயார் நிலையில் இருந்து வரும் நிலையில் உளுந்து பயிறு பருத்தி ஆகிய சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலங்களில் மழைநீர் தேங்கியது. ஆனால் இந்த மழை பயிருக்கு ஒரு டானிக் போல் உள்ளது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
சில இடங்களில் பயிரிடப்பட்டுள்ள எள் சாகுபடிக்கு நேற்று பெய்த மழை பயனுள்ளதாகவும் இருந்தது. கொள்ளிடம் பகுதியில் சில இடங்களில் கனமழை பெய்தாலும், சில பகுதிகளில் லேசான தூரல் மழை இருந்தது. இதனால் அனைத்து பகுதிகளிலும் நேற்று குளிர்ச்சியான தட்பவெப்ப சூழ்நிலை நிலவியது.

