*பொதுமக்கள் நன்றி தெரிவிப்பு
ஆர்.எஸ்.மங்கலம் : தமிழக அரசின் சிறப்பான வளர்ச்சி திட்டப் பணிகளால் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 21 கோடியில் வளர்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்றுள்ளது. இதற்கு தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆர்.எஸ்.மங்கலம் வளர்ந்துவரும் நகரங்களில் முக்கிய நகர் பகுதியாகும். இந்த ஊருக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக தமிழகத்திலேயே இரண்டாவது மிகப் பெரிய கண்மாய் உள்ளது. மேலும் சுற்றுவட்டாரத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தலைநகர் போல் விளங்குகிறது.
ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. இதில் ஆர்.எஸ்.மங்கலம் டவுன் பகுதி மட்டுமின்றி செட்டியமடை, பிச்சனா கோட்டை, பெருமாள் மடை, கீழக்கோட்டை, இந்திரா நகர் உள்ளிட்ட கிராம பகுதிகளும் இந்த பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளாக உள்ளது.
ஏற்கனவே அடிப்படை வசதிகள் மிகவும் குறைவாக இருந்து வந்த நிலையில் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் தமிழக அரசின் ஏராளமான திட்டப் பணிகளால் நகர்ப்பகுதி வளர்ச்சியடைந்துள்ளது.
அரசூரணி குளம் பாதுகாப்பு: ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி மக்களுக்கு மிகப் பெரிய நீர் ஆதாரமாக விளங்ககூடிய அரசூரணியை, கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.1.45 கோடி செலவில் குளத்தில் உள்ள தண்ணீரை சுகாதாரமான முறையில் மக்கள் பயன்படுத்தும் விதமாக குளத்தை சுற்றிலும் கம்பி வேலி அமைக்கப்பட்டது.
மேலும் குளத்தை சுற்றி கரை பகுதியில் பொதுமக்கள் நடைபயிற்சி செய்வதற்கு ஏதுவாக பேவர் பிளாக் மூலம் நடைபாதை அமைக்கப்பட்டு பெரிய கண்மாயில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் விதமாக பணிகள் முடிக்கப்பட்டு குளம் முழுவதும் தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது.
அதே போல் தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.5.43 கோடியிலும், நபார்டு சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.1.90 கோடி மதிப்பிலும் நகர்புறசாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகர்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.1.73 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்றுள்ளது.
பள்ளி மேம்பாட்டு நிதிமூலமாக ரூ.1.54 கோடியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் மராமத்து உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதிமூலம் ரூ.51.10 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகளும், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலமாக ரூ.8.60 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகளும் நடைபெற்றுள்ளது.
மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்: ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வரும் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் மருத்துவம் பார்க்க வரும் நிலையில் சரியான கட்டிடம் வசதி இல்லாமல் சேதமடைந்த கட்டிடத்தில் மருத்துவமனை இயங்கி வந்தது.
கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் கண்டுகொள்ளாமல் விட்டு விட்ட நிலையில், முக ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசால் ஏற்கனவே ரூ.1.7 கோடி மதிப்பில் பேரூராட்சி மூலமாக நிதி ஒதுக்கீடு செய்து இரண்டு கட்டிடங்கள் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து திறக்கப்பட்டு மருத்துவமனை இயங்கு வரும் நிலையில் மேலும் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு ரூ.75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு மட்டுமே ரூ.2.45 கோடி ஒதுக்கீடு செய்து வளர்ச்சியடைய செய்துள்ளது ஒரு சாதனையாகவே இப்பகுதி மக்கள் கருதுகின்றனர்.
ரூ.21 கோடியில் பணிகள்: அயோதி தாஸ் பண்டிதர் ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தின் மூலமாக ரூ.34.50 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் பயனாளிகள் பயனடைந்துள்ளனர். இதே போல் மூலதான நிதி மூலமாக ரூ.1 கோடி, மற்றும் தூய்மை பாரத திட்டம் மூலமாக ரூ.15 லட்சம் உட்பட சுமார் ரூ.21 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட பணிகள் நடந்துள்ளதால் மக்கள் பெரிதும் பயனடைந்துள்ளதாகவும், சிறப்பான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்களை நிறைவேற்றி தந்த தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

