ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கேம்ப்பெல் வில்சன் தனது பதவியை திடீர் ராஜினாமா செய்து உள்ளார். இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு வரை உள்ள நிலையில், சிஇஓ பதவியை திடீரென ராஜினாமா செய்து உள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன் ஏர் இந்தியா CEO கேம்ப்பெல் வில்சன் தனது பதவியை விரைவில் ராஜினாமா செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது அவர் பதவி விலகி உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேம்ப்பெல் வில்சன் ஐந்து ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ-வாக நியமிக்கப்பட்டிருந்தார். அந்த வகையில் ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரியாக அவரது பதவிக்காலம் ஜூலை 2027-ல் தான் நிறைவடைய உள்ளது. அதற்கு இன்னும் 15 மாதங்கள் இருக்கும் நிலையில், தற்போது பதவி விலகியிருக்கிறார். கடந்த 2022-ஆம் ஆண்டில் ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) மற்றும் நிர்வாக இயக்குநராக (MD) விமானப் போக்குவரத்துத் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான சிறந்த அனுபவம் கொண்ட கேம்ப்பெல் வில்சன் நியமிக்கப்பட்டார். முழு சேவையளிக்கும் விமான நிறுவனங்கள் மற்றும் குறைந்த கட்டண விமான நிறுவனங்கள் ஆகிய இரண்டிலும் பணியாற்றியுள்ளார்.
ஏர் இந்தியாவில் இருந்து பதவி விலகி இருக்கும் கேம்ப்பெல் வில்சன் இதற்கு முன்பு, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முழு உரிமையாண்மையின் கீழ் இயங்கும் குறைந்த கட்டண துணை நிறுவனமான ‘ஸ்கூட்’-ன் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. 260 பேர் உயிரிழந்த , ஜூன் 2025-ல் நடைபெற்ற அகமதாபாத் விமான விபத்தின் விளைவுகளே கேம்ப்பெல் வில்சன் ராஜினாமா செய்ததற்கான முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. அதே போல 2025-ஆம் நிதியாண்டில் ஏர் இந்தியா விமான நிறுவனம் கிட்டத்தட்ட ரூ.98 பில்லியன் இழப்பைச் சந்தித்ததாக அறிவித்தது, மேலும் 2026-ஆம் ஆண்டில் இதைவிட அதிகமான இழப்புகள் கணிக்கப்பட்டுள்ளன. இது போன்ற அழுத்தங்கள் காரணமாகவே கேம்ப்பெல் வில்சன் முன்கூட்டியே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
