×

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் நிராகரிப்பு

புதுடெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானம் எந்த காரணமும் கூறப்படாமல் இரு அவைகளிலும் நிராகரிப்பு செய்யப்பட்டது. SIR, வாக்குத் திருட்டு விவகாரத்தில் ஞானேஷ் குமார் மீது குற்றச்சாட்டு முன்வைத்து 130 மக்களவை எம்.பி.க்கள், 63 மாநிலங்களவை எம்.பி.க்கள் கையெழுத்திட்ட பதவிநீக்க தீர்மானத்தை இரு அவைத் தலைவர்களும் நிராகரித்தனர்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி கடந்த மாதம் 13ம் தேதி எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நோட்டீஸ் சமர்பித்தன. இந்நிலையில், சட்டமன்ற தேர்தலை ஒன்றிய அரசுக்கு சாதகமாக்கும் வகையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தகுதிவாய்ந்த லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக இந்தியா கூட்டணி கட்சிகள் தலைமை தேர்தல் ஆணையர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்தன. விதிகளின்படி தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்யக் கோரும் நோட்டீசில் குறைந்தது மக்களவையில்100 எம்பிக்கள் மற்றும் மாநிலங்களவையில் 50 எம்பிக்களின் கையெழுத்தும் தேவையாகும்.

இதனை தொடர்ந்து சுமார் 193 எம்பிக்களின் கையெழுத்துடன் தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்யக்கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் நோட்டீஸ் வழங்கினார்கள். இதில் 130 மக்களவை எம்பிக்களும், 63 மாநிலங்களவை எம்பிக்களும் கையெழுத்திட்டுள்ளனர். இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சி எம்பிக்களும் இதில் கையெழுத்திட்டுள்ளனர். கூட்டணியில் இடம்பெறாத ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இந்த நடவடிக்கையை ஆதரித்து கையெழுத்திட்டுள்ளன.சில சுயேட்சை எம்பிக்களும் இந்த நோட்டீசில் கையெழுத்திட்டுள்ளனர். வரலாற்றிலேயே தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்யக் கோரி நோட்டீஸ் அனுப்பப்படுவது இதுவே முதல் முறையாகும். பதவியில் பாரபட்சமான நடவடிக்கை, தேர்தல் மோசடி விசாரணையை வேண்டுமென்றே தடுத்தல் மற்றும் வாக்குரிமை பறிப்பு உள்ளிட்ட புகார்கள் குறிப்பிடப்பட்டு இருந்தது.

Tags : Chief Election Commissioner ,Gyanesh Kumar ,New Delhi ,Houses ,SIR ,
× RELATED ஆந்திராவின் புதிய தலைநகராக அமராவதி...